மயான கொள்ளை: அங்காளம்மன் அருள் புரியும் ரகசியம்! சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய கதை!
Mayana Kollai 2026: "தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மயான கொள்ளை திருவிழா குறித்து, வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்."

Mayana Kollai History: தமிழ்நாட்டில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றாக மயான கொள்ளை திருவிழா இருந்து வருகிறது. குறிப்பாக வட தமிழாக்கத்தில் இந்த திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது.மகா சிவராத்திரிக்கு மறுநாள் வரும் மாசி அமாவாசை அன்று, அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயங்களில் இந்த விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இன்று திருவிழா ஏன் கொண்டாடப்படுகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம்
இந்த விழாவின் தொடக்கம் சிவபெருமானுக்கும் பிரம்மனுக்கும் இடையிலான ஒரு புராணச் சம்பவத்தில் தொடங்குவதாக நம்பப்படுகிறது. முன்னொரு காலத்தில் பிரம்மதேவனுக்கும் சிவனைப் போலவே 5 தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு நிகரானவன் என்ற ஆணவம் பிரம்மனுக்கு ஏற்பட்டது. இதனால் ஒரு முறை மாறுவேடத்தில் பிரம்மன் சென்றுள்ளார். அப்போது பார்வதி தேவி, பிரம்மனைத் தன் கணவன் எனத் தவறுதலாக நினைத்து அவருக்குப் பாத பூஜை செய்ய முயன்றார்.
இதைக் கண்டு கோபம் அடைந்த சிவபெருமான், பிரம்மனின் ஆணவத்தை அடக்க அவரது ஒரு தலையைக் கொய்தார். ஆனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. பிரம்மனின் தலை சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டது. அதுவே 'பிரம்ம கபாலம்' என்று அழைக்கப்படுகிறது.
பசியால் அவதி அடைந்த சிவபெருமான்
சிவனின் கையில் ஒட்டிக்கொண்ட அந்தக் கபாலம், அவர் கையில் ஏற்கும் உணவை எல்லாம் அவரிடம் சேரவிடாமல் தானே உண்டுவிடும். இதனால் சிவபெருமான் கடும் பசியால் வாடினார். பசி தாங்காத ஈசன், சுடுகாடுகளில் அலைந்து திரிந்து அங்குள்ள சாம்பலைப் பூசிக்கொண்டு பித்தனாக மாறினார். பார்வதி தேவியின் அண்ணனான திருமாலின், அறிவுறுத்தலின்படி சிவனின் இந்தப் பசிப்பிணியைப் போக்கி, அவரைக் காக்க பார்வதி தேவி எடுத்த அவதாரமே 'அங்காள பரமேஸ்வரி'என அழைக்கப்படுகிறது.
அங்காளம்மனின் தந்திரமும் மயான கொள்ளையும்
அங்காள பரமேஸ்வரி அவதாரம் எடுத்த பார்வதி தேவி, மேல்மலையனூர் மயானத்திற்குச் சென்றார். அங்கு சுவையான உணவைச் சமைத்து மூன்று கவளங்களாக உருட்டினார். முதல் இரண்டு கவளங்களை கபாலத்திற்குப் போட்டார். அதன் சுவையில் மயங்கிய கபாலம், மூன்றாவது கவளத்தை அம்மன் தரையில் வீசியபோது, அதை உண்ண சிவனின் கையை விட்டு கீழே இறங்கியது. அந்த நொடி, அம்மன் தனது விஸ்வரூபத்தை எடுத்து கபாலத்தைத் தனது காலால் மிதித்து அழித்தார். சிவபெருமான் சாப விமோசனம் பெற்ற இந்த நிகழ்வே 'மயான கொள்ளை' என்று கொண்டாடப்படுகிறது.
பக்தர்களின் நேர்த்திக்கடனும் வழிபாட்டு முறையும்
இந்த விழாவின் போது, பக்தர்கள் பல்வேறு உக்கிரமான வேடங்களை அணிந்து கொள்வார்கள். காளி, காட்டேரி, அங்காளம்மன் போன்ற வேடமிட்டு ஆக்ரோஷமாக ஆடுவார்கள். அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி ஊர்வலமாக, மயானத்தை நோக்கிச் செல்லும் ஊர்வலத்தின் போது, பக்தர்கள் கொண்டு வரும் தானியங்கள், பழங்கள், சுண்டல் மற்றும் சில்லறை நாணயங்களை வழிநெடுகிலும் வாரி இறைப்பார்கள். மக்கள் இதைப் போட்டியிட்டுக் கொண்டு சேகரிப்பார்கள். இவ்வாறு 'கொள்ளை' இடுவதால் தங்கள் குடும்பத்தில் உள்ள வறுமையும், பிணிகளும் நீங்கும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது
வடதமிழ்நாட்டின் பாரம்பரியம்
வடதமிழ்நாட்டில் தான் அதிக அளவு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில்களில் வெகு விமர்சையாக மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
ஆன்மீகம் உணர்த்தும் தத்துவம் என்ன ?
மயான கொள்ளை என்பது வெறும் ஒரு சடங்கு மட்டுமல்ல, அது மனிதனின் ஆணவத்த இறைவன் அழிப்பதைக் குறிக்கிறது. சுடுகாடு என்பது வாழ்வின் முடிவைக் குறிக்கும் இடம் மட்டுமல்ல, அது ஆன்மாக்கள் இறைவனுடன் கலக்கும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. தீய சக்திகளிடமிருந்து ஊரைக் காக்கவும், விவசாயம் செழிக்கவும் இந்தத் திருவிழா இன்றும் கிராமப்புறங்களில் ஒரு பெரும் கலாச்சார நிகழ்வாகத் திகழ்கிறது.
இதன் மூலம் பிரம்மாவின் ஆணவமும், சிவனின் கோபமும் எந்த அளவிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்த்துகிறது. இதுபோல மனிதர்களும் ஆணவம் மற்றும் கோபமும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே இந்த ஆன்மீக கதை உணர்த்தும் தத்துவமாக இருக்கிறது.























