தமிழக ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மக்களுக்கு கிருஸ்துமஸ் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில்,
”சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக; அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடும் ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக் கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர் இயேசுபிரான். “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்றும், “மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்” என்றும், “அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே இயேசு அருளிய போதனைகள் எக்காலத்துக்கும் எந்நிலத்துக்கும் பொருந்தும்.
இத்தகைய உயரிய நெறிகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் கிறித்துவத் தோழர்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை நமது அரசு தொடர்ந்து ஆற்றி வருகிறது. 1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தையும், 1999-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தையும், 2007-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அமைத்தார். அவரது அடியொற்றி நடக்கும் நமது திராவிட மாடல் அரசும் கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறித்துவ உதவி சங்கம் கூடுதலாகத் துவங்கிட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் அரவணைக்கும் நமது திராவிட மாடல் அரசானது கிறிஸ்தவ மக்களின் சமூக - பொருளாதார - கல்வி நிலையை உயர்த்துவதிலும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் உறுதியோடு உள்ளது.
அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் வாழ்த்து..!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மக்களுக்கு கிருஸ்துமஸ் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். கிருஸ்துமஸ் குறித்து வாழ்த்து குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக கிருஸ்துமஸ் சகோதர சகோதரிகளுக்கு எனது கிருஸ்துமஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக அன்புடனும், இரக்கத்துடனும் பூமியை ஆசீர்வதித்த இயேசு கிருஸ்துவின் பிறப்பு கிருஸ்துமஸ் தினவிழாவாக கொண்டாடப்படுகிறது. அவருடைய மன்னிப்புச் செய்தி மனித குலத்திற்கு விலைமதிப்பற்ற பரிசாகும். மேலும், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நமக்கு ஒரே எதிர்காலம் என்பதை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது.
கிருஸ்துமஸ் பண்டிகை நம் எல்லோருக்கும், மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தினை வழங்கட்டும். பல்வேறு நாடுகளில் அதிகரித்துவரும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிருஸ்துமஸ் விழாவை கொண்டாட கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “
கிறிஸ்துவ மக்களின் உரிமைக்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் அரணாக நிற்கும்!
ஏழை எளியவர்கள் மீது இரக்கம்கொண்டு அன்பையும், கருணையையும் பொழிந்த இயேசு பெருமானின் பிறந்தநாளை கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ சகோதர், சகோதரிகளுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மண்ணில் மனிதநேயம் தழைக்க, "அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர் வாதம் செய்; உன்னை வெறுப்பவர்க்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று" என அன்பையும், பொறுமையையும் போதித்த இயேசு பெருமான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி, கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் அடிமைத்தனம், தீண்டாமை, படிப்பறிவு இல்லாதபோது, அந்த அடிமை விலங்களை உடைத்து, பாமர மக்களுக்குச் சிறந்த கல்வியைத் தருவதற்காக, இயேசு திருச்சபையினர் ஆற்றியிருக்கின்ற அருந்தொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
தமிழ் சமூகத்திற்கு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மருத்துவத்திலும், சேவையிலும், இயேசு திருச்சபையினர் பெரும் தொண்டாற்றி இருக்கின்றனர்.
ஆனால், சமீப காலமாக இந்தியாவில் நிலவி வரும் சகிப்பு தன்மையின் காரணமாகவும், மத்திய பாசிச பாஜகவின் கொடுங்கோன்மை ஆட்சியாலும், கிறிஸ்துவ சகோதரர், சகோதரிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை மறுக்கு முடியாது.
அதே நேரத்தில், கிறிஸ்துவ மக்களின் பாதுகாப்புக்காக, உரிமைக்காக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பியும், போராடியும் வருகிறது. எதிர் வரும் காலங்களிலும், கிறிஸ்துவ மக்களுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரணாக நிற்கும் என்பதை இந்த இனிய நாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.
கிறிஸ்துமஸ் நன்னாளில் அமைதி, ஒற்றுமை, நிம்மதி, மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மீண்டும், மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.