புதுச்சேரி: சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 9-ம் தேதிக்கு நீதிபதி சந்திரசேகர் ஒத்திவைத்தார்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜேஎம்-1) விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கில் குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்ள நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதனிடையே, புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி அமைச்சர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என்று கூற அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா? என கேள்வி எழுப்பியதுடன், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தியது.
இதையடுத்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என அவரது தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறவும் அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சேரலாதன் கடந்த வாரம் மாஹேவுக்கு மாற்றப்பட்டார். இதனால் புதிய நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது அவரது சகோதரர் தரப்பு வழக்கறிஞர் பிரவீன், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து வழக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை அவர் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு நீதிபதி சந்திரசேகர் ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினமும் அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.
