நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாளை தொடங்குகிறது. கடந்த முறை போன்று இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. முதற்கட்டமாக, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


மன்சூர் அலிகானுக்கு என்னாச்சு?


இந்த தேர்தலில், வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதற்காக, வேலூர் தொகுதியில் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று பிரச்சாரத்தின் கடைசி நாள் என்பதால் மக்களிடம் வாக்கு சேகரித்து வந்த அவர், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.


இதையடுத்து, அவர் அங்கே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும், மன்சூர் அலிகானிடம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர், சென்னை வந்த மன்சூர் அலிகான் கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று உண்ட உணவினால் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மன்சூர் அலிகானே அறிக்கை வெளியிட்டார்.


மருத்துவர்களின் ஆலோசனைகளை மீறி டிஸ்சார்ஜா?


இந்த நிலையில்தான், மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் மன்சூர் அலிகான்.


உடல்நிலைக்குறைவால் பாதிக்கப்பட்ட போதிலும், மருத்துவர்களின் ஆலோசனைகளையும் மீறி, தான் போட்டியிடும் வேலூர் தொகுதி மக்களை பார்க்க மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆனதாக கூறப்படுகிறது. மன்சூர் அலிகான், நாளை அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து வேலூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கினார். ஏற்கனவே அவர் தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் கட்சி நடத்தி வந்தார். அதுவே இந்திய ஜனநாயக புலிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


மேலும் முதலில் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்தார். பின்னர் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் ஒரு தொகுதி கேட்டு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எதுவும் சுமூகமான முடிவை பெறாததால் வேலூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் மிக தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.