மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் எம்.ஆர்.ஐ. இயந்திரங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் நிலையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்  அதிக விலையில் இயந்திரங்கள் வாங்கும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Continues below advertisement

புறக்கணிக்கப்படும் மேக் இன் இந்தியா உற்பத்தியாளர்கள்

தமிழ்நாட்டில் புதிதாக தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ளது. தமிழ்நாட்டின் நிதிச்சுமையை கருத்தில்கொண்டு பல்வேறு விதமான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இப்படியான நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 29 எம்.ஆர்.ஐ  இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரும்  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் விடப்பட்டுள்ளது. 

இந்த டெண்டருக்காக சமர்பிக்கப்பட்ட நிறுவனங்களின் அறிக்கையை ஆய்வு செய்ததில் அதில் கொள்முதல் விலையில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசு ஒரு இயந்திரத்திற்கு ரூ.7 கோடி முதல் ரூ.15 கோடி வரை செலவு செய்ய தயாராக உள்ளது. ஆனால் அதைவிட மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட CDSCO அங்கீகாரம் பெற்ற 1.5T எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் இந்தியாவில் 5 கோடி ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் வணிகரீதியாக கிடைப்பதாக சொல்லப்படுகிறது. 

Continues below advertisement

தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு தவிர்ப்பு

அரசு என்னதான் அதிக பணம் செலவழிக்க முன்வந்தாலும் அவை தொழில்நுட்ப ரீதியாகத் தரம் குறைந்த இயந்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்த எம்.ஆர்.ஐ இயந்திரம் வாங்கினால் தமிழக அரசுக்கு ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும் என மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

அதுமட்டுமல்லாமல் இந்த இயந்திரங்களை கொள்முதல் செய்ய வெளியிடப்பட்டுள்ள டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களை விற்பனை செய்தவர் பெயர் மட்டுமே ஒப்பந்தத்தில் இடம்பெறும், ஆனால் இந்த இயந்திரம் தொடர்பான எந்தவொரு தகவல்களும் இருக்காது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தேசிய பாதுகாப்பு  மற்றும் தரவு இறையாண்மை தொடர்பான கவலைகளை எழுப்பும் வகையில் அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு 

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்  இதுபோன்ற மருத்துவ உபகரணங்களுக்கான டெண்டரில் மேக் இன் இந்தியாவின் கீழ் வரும் உற்பத்தியாளர்களை புறக்கணிப்பது இது முதல்முறையல்ல. முன்னதாக சி.டி.ஸ்கேனர் உற்பத்தியாளர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், அதுதொடர்பான டெண்டருக்கு 2026 ஜூன் 30 வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. 

அதேசமயம் மேக் இன் இந்தியா திட்டம் கீழ் செயல்படும் உற்பத்தியாளர்கள் மாநில அரசின் அனைத்து விதமான டெண்டரிலும் பங்கேற்கலாம் என்பது விதிமுறையாக உள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விதிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. 

Also Read: Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!

ஏற்கனவே சி.டி.ஸ்கேனர் விவகாரத்தில் இந்த விதிமுறை பின்பற்றப்பட்டாதது தான் அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. தற்போது MRI டெண்டர் விவகாரத்திலும்  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இதுபோன்று செயல்படுவது மிகப்பெரிய அளவில் கேள்விகளையும், சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.