காலநிலை மாற்றம் என்பது சர்வதேச அளவில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மனித இனம் வாழும் புவிக்கான பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த ஆபத்திலிருந்து மீள, உலக நாடுகள் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக அரசும் பல்வேறும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


தமிழ்நாடு அரசிற்கு வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கவும், பருவநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு மாநில செயல் திட்டத்திற்கு வழிகாட்டவும் 22 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு பருவநிலை மாற்றம் குறித்த ஆலோசனை  குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தியுள்ள பல முக்கிய திட்டங்களின் விவரங்களை கீழே காணலாம். 


1. நாட்டின் முதல் தேவாங்கு சரணாலயம்:


கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்வதேச ஒன்றியம், தேவாங்கு இனத்தை அழிந்து வரும் பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்கள் வாழும் இடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுதல்களை தணித்தல் மூலமே தேவாங்குகளின் இனத்தை பெருக்க இயலும் என்பதன் அடிப்படையில் தமிழக சரணாலயம் அமைக்க முடிவு செய்துள்ளது.




2. தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம்:


மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள, 477.24 ஏக்கர் நிலப்பரப்பை, அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  அங்குள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த  சிற்றினங்களின் வாழ்விடங்கள்  போன்றவற்றை பாதுகாக்கும் பொருட்டு  இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.


3. 17-வது வனவிலங்குகள் சரணாலயம்:


தமிழ்நாட்டின் 17-வது புதிய சரணாலயமாக காவிரி தெற்கு வனவிலங்குகள் சரணாலயம் கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சுற்றியுள்ள காவிரி தெற்கு பகுதிகளில் உள்ள 686.405 சதுர கிலோ மீட்டர் பாதுகாக்கப்பட்ட காடுகளாகவும், அந்தப் பகுதி வன விலங்குகள் சரணாலாயமாகவும் அறிவிக்கப்படுகிறது. புதிய சரணாலயமானது கர்நாடகாவில் ஏற்கனவே உள்ள காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தை இணைக்கும் வகையில் அமைகிறது.


4. அகஸ்திய மலை யானைகள் காப்பகம்


நீலகிரி, நிலாம்பூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் ஆனைமலை ஆகிய யானை காப்பகங்களை தொடர்ந்து, தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக அகஸ்திய மலை யானைகள் காப்பாகம் அறிவிக்கப்பட்டது. யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும், பல்லுயிர் பெருக்கத்திற்காகவும் 1,197 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட அகஸ்திய மலை பகுதி யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக  அறிவிக்கப்பட்டுள்ளது.




5. காலநிலை மாற்றத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு


சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத்த்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளது. அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம்,  அடுத்த பத்து ஆண்டுகளில் மாநிலத்தின் பசுமைப் பரப்பை 23.7%-லிருந்து இருந்து 33% ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. 


06. ரூ.10 கோடி செலவில் ரேடார்கள் வாங்க முடிவு


கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக கொட்டித் தீர்த்த கனமழையை தொடர்ந்து, பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை உருவாக்க தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. காலநிலை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை தொடர்பான ஆய்வகம் ஒன்று அமைக்கப்பட்டு, அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பான தரவுகளை சேகரிக்க காலநிலை ஸ்டூடியோ ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.


அரிட்டாபட்டி குறித்து சு. வெங்கடேசன், எம்.பி கருத்து:


அரிட்டாபட்டியை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்ததற்காக, மாநில அரசிற்கு தமிழக எம்.பி., சு. வெங்கடேசன் பாரட்டுக்களை தெரிவித்துள்ளார். நாட்டிலேயே வரலாற்று பாரம்பரியமும்,  இயற்கை சங்கிலியும் இணைந்த இடம் இந்தப்பகுதி என்பது தொடர்பான விழிப்புணர்வை கிராம மக்களிடம் ஏற்படுத்த கோரிக்கை வைத்துள்ளார். அந்த இடத்தின் அமைதி குலையாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.  மாணவர்களும் , ஆராய்ச்சியாளர்களும்  இந்தப் பகுதியை பார்வையிட  காட்சிக்கூடத்தை சமவெளிபகுதியில் ஏற்படுத்தவும், மாவவட்ட நிர்வாகம் திட்ட அறிக்கையை தயாரிக்க, சு. வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.


பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கருத்து:


சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வழங்கறிஞர் வெற்றிச்செலவன் பேசும்போது, ”காலநிலை  மாற்றம் தொடர்பாக மத்திய அரசு 2010-ஆம் ஆண்டே நடவடிக்கைகளை தொடர்ந்தாலும், மாநிலங்கள் அளவில் எந்தவித பெரிய முன்னெடுப்புகளும் எடுக்கப்படாமலேயேதான் இருந்தது.


மத்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டு செயல் திட்டம் உருவாக்கப்பட்டாலும், அது செயல் வடிவம் பெறவில்லை. ஆனால் திமுக தலைமையிலான அரசு அமைந்ததும் தமிழ்நாடு பசுமை திட்டம், வெட்லேண்ட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களை வகுத்து, அதை செயல்படுத்த தமிழ்நாடு கிரீன் கம்பெனி எனும் நிறுவனமும் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.  அதன் தொடர்ச்சியாகவே அடுத்தடுத்து புதுப்புது திட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன. அரசின் இந்த அறிவிப்புகள் உடனடியாக இல்லாமல், நீண்டகால இடைவெளியில் நிச்சயம் பெரும் பலனை அளிக்கும். காலநிலை மாற்றம் தொடர்பான பாதிப்பு மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கி அரசு பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. விரைவில் அதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழக அரசு தற்போது முன்னெடுத்துள்ள திட்டங்களை முறையாக செயல்படுத்தப்படும்பொழுது,  எதிர்காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் காலநிலை மாற்றம் தொடர்பான முன்னெடுப்பிற்கும் தமிழகமே முன்மாதிரியாக இருக்கும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.