தமிழ்நாட்டில் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வேளாண்துறை செயலாளராக பதவி வகித்து வந்த எல் சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்:


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெய்ஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


நில நிர்வாகத்துறை ஆணையராக பதவி வகித்து வந்த எஸ். நாகராஜன் ஐ.ஏ.எஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டும் இன்றி, மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் பொறுப்பை நாகராஜன், கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மீன்வளத்துறை ஆணையர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த கே எஸ் பழனிசாமி ஐ.ஏ.எஸ், நில நிர்வாகத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மீன் வளத்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சுஞ்சோங்கம் ஜாதக் சிரு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.


சமீப காலமாக, ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ராஜாராமன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.


தொடர் கதையாகும் அதிகாரிகளின் பணியிட மாற்றம்:


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தொழில்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். ஆனந்த் குமார் ஐஏஎஸ், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.


திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் நியமனம் செய்யப்பட்டார். சேலம் நகர துணை காவல் ஆணையராக இருந்த லாவண்யா, சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரியின் எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டார். மதுரை நகர (வடக்கு) துணை காவல் ஆணையராக இருந்த அரவிந்த், சிவகங்கை மாவட்ட காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.


தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வட சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். ஐ.ஜி ஆர்.சுதாகர் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.


அதேபோன்று, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் , சென்னை காவல்துறை தலைமையக  ஐ.ஜி. யாக நியமிக்கப்பட்டார். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டார்.