அரசுப் பள்ளிகளில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு(Mahavishnu) பேசிய கருத்துக்களும், அரசுப்பள்ளி ஆசிரியருடன் கருத்து மோதலில் ஈடுபட்டதும், மாற்றுத்திறனாளிகள் பற்றிய அவரது பேச்சும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இந்த சூழலில், மகாவிஷ்ணு தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது. 


போலீசார் விசாரணையில் மகாவிஷ்ணு:


அவர் மீது திருவொற்றியூர் காவல்நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையத்தில் பலரும் புகார் அளித்தனர். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்புவதாகவும், எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம் சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 


கடும் கண்டனம்:


பரம்பொருள் எனும் அறக்கட்டளை வைத்து நடத்தி வரும் மகாவிஷ்ணு ஆன்மீக சொற்பொழிவுகளை பல இடங்களில் நிகழ்த்தி வருகிறார். அவரது பெரும்பாலான கருத்துக்கள் பகுத்தறிவுக்கு முரணாக இருப்பதால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.


இந்த சூழலில், சென்னை அசோக் நகரில் உள்ள பிரபலமான அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகள் குறித்தும், மறுபிறவி குறித்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார். அதைத் தடுத்து கேள்வி கேட்ட அந்த பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர் சங்கரிடம் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டார். இந்த சம்பவத்தை அங்கே இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.


அமைச்சர் ஆவேசம், முதலமைச்சர் அறிவுரை:


இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அரசுப்பள்ளிகளில் என்ன நடக்கிறது? எனவும், ஆசிரியர் சங்கரை அவமதித்த மகாவிஷ்ணு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் அரசுப்பள்ளி ஆசிரியரான மாற்றுத்திறனாளி சங்கரை அவமதிக்கும் முறையில் நடந்து கொண்ட மகாவிஷ்ணுவை சும்மா விடமாட்டேன் என்று ஆவேசத்துடன் கூறினார்.


பள்ளிக்கல்வித்துறை சார்பில் இனி பள்ளிகளில் கல்வியைத் தவிர மற்ற நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று அதிரடி உத்தரவிட்டது. மேலும், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிவியல் வழி மட்டுமே முன்னேற்றத்தின் வழி என்று அனைவருக்கும் அறிவுறுத்தினார்.


இந்த சூழலிலே மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் பல காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சூழலிலே, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ள மகாவிஷ்ணுவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.