விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “விடுபட்டவரக்ளுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகைக்காக 4 ஆம் கட்டமாக 9000 இடங்களில் முகாம்கள் அமைக்கடுகின்றன.
மகளிர் உரிமைத் தொகையை பெற மீண்டும் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 1.14 கோடி மக்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
தகுதி உடைய பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை கிடைக்கபெறாத பெண்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.
9 ஆயிரம் இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக உறுப்பினர் ஈஸ்வரன் கோரிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் குறுக்கிட்டு பதிலளித்தார் .
அப்போது பேசிய அவர், “மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. ஈஸ்வரன் அவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய அந்தத் திட்டத்தின்கீழ், ஒரு கோடியே 14 இலட்சம் பேர்களுக்கு அது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தகுதிவாய்ந்த எல்லோருக்கும் அது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இன்னும் இதிலே விடுபட்டிருக்கக்கூடியவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, இந்த அவையிலும் அது எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, இதையெல்லாம் கருத்திலே கொண்டு. மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின்கீழ் பொது மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை உடனடியாக நிறைவேற்றுகிற பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
ஆகவே, அந்தப் பணியைப் பொறுத்தவரையில், வருகிற ஜூன் மாதம், 4 ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் கோரிக்கைகளைக் கேட்கக்கூடிய பணிகளை நாங்கள் தொடங்கவிருக்கிறோம்.
அந்தப் பணி 9 ஆயிரம் இடங்களில் நடைபெறவிருக்கிறது. அப்படி நடைபெறுகிறபோது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால் நிச்சயமாக விரைவில் அவர்களுக்கும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.