ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்காத குடும்பத் தலைவிகள் கை குழந்தைகளுடன் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின் வசதி இல்லாததாலும், அதிக கும்பல் குவிந்ததாலும் கைக் குழந்தையுடன் வந்த பெண்கள் பரிதவித்தனர்.




கரூரில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் விண்ணப்பித்து பணம் கிடைக்காதவர்கள் பிரத்யேக இணையதளம் மூலம் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம், மேல்முறையீடு செய்யலாம் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.


 




அதன் அடிப்படையில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ சேவை மையம், தற்காலிக புகார் மையத்தில் பணம் கிடைக்காததற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும், மீண்டும் விண்ணப்பிப்பதற்காகவும் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில்  ஏராளமான பெண்கள் கை குழந்தைகளுடன், மூதாட்டிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக கைக்குழந்தைகளுடன் வந்த 10க்கும் மேற்பட்ட தாய்மார்கள் அந்த இடத்தில் குவிந்தனர். மின் வசதி இல்லாததால் கைக்குழந்தைகள் வேர்வையில் அழ தொடங்கினர்.


 




இந்த தொகை கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்கலாம். இது போல் தகுதி உள்ளவர்கள். தகுதி இல்லாதவர்கள் என பிரித்து தருவதால் அலைச்சல் ஏற்படுவதாக பெண்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். வேறு வழியில்லாமல் கைக்குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் தங்களது ஆதார் கார்டு அட்டை, வங்கி கணக்கு அட்டை உள்ளிட்டவைகளை குழந்தைகளுக்கு விசிறியாக பயன்படுத்தினர். சிறப்பு முகாம் நடைபெறும் நிலையில் மக்கள் அதிக அளவில் வருவார்கள் என்று அதிகாரிகள் உணராமல் போதிய அடிப்படை வசதிகள் செய்யாமல்  கை குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதேபோல், கிருஷ்ணராயபுரம், கடவூர் மன்மங்கலம், அரவக்குறிச்சி உள்ளிட்ட வட்டாட்சியர்  அலுவலகங்களிலும் இதேபோல் பெண்கள், மூதாட்டிகள் அதிக அளவில் குவிந்தனர்.