சென்னையில் மற்றுமொரு புதிய மையம் திறக்கப்பட உள்ளது. இது அரசின் டிஜிட்டல் சேவைகளை பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியின் முக்கிய மைல்கல்லாகும் என்றார்.

மதுரையில் புதிய ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது
 
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மதுரை கே.கே. நகரில் ஒரு புதிய ஆதார் சேவை மையத்தை இன்று (26 டிசம்பர் 2025) திறந்துள்ளது. இந்த புதிய வசதியை மதுரை மாவட்ட துணை ஆட்சியர் M. காளீஸ்வரி திறந்து வைத்தார். பெங்களூரிலுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மண்டல அலுவலகத்தின் இயக்குநர் பவன் குமார் பஹ்வா தலைமையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய ஆதார் சேவை மையம், "மாடல்-பி" (Model-B) தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் எட்டு கணினி முனையங்கள் செயல்படுவதால், தினமும் சுமார் 400 முதல் 500 பேர் வரை தங்களது ஆதார் தொடர்பான பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும். இந்த மையத்தில் அனைத்து வயதினருக்கும் புதிய ஆதார் பதிவு செய்தல், புகைப்படம் மற்றும் கைரேகை போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பித்தல், மற்றும் பெயர், முகவரி, கைபேசி எண் போன்ற திருத்தங்களைச் செய்யும் வசதிகள் வழங்கப்படுகின்றன.
 
கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல்
 
பொதுமக்களின் வசதிக்காக இந்த மையம் முழுமையாக குளிரூட்டப்பட்டு, நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தனித்தனி கவுண்டர்கள் இங்கு செயல்படுகின்றன. மேலும், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆதார் பதிவு மற்றும் 5 மற்றும் 15 வயதுடைய குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் சேவைகள் எப்போதும் போல முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படும்.
 
புதிய மையம் திறக்கப்பட உள்ளது
 
இந்தத் திறப்பு விழாவின் போது செய்தியாளர்களிடம் பேசிய மண்டல இயக்குநர் பவன் குமார் பஹ்வா, நாடு முழுவதும் 480-க்கும் மேற்பட்ட ஆதார் சேவை மையங்களை நிறுவும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய மையங்களை உள்ளன என்றும், அந்த எண்ணிக்கையை 2026 செப்டம்பர் மாதத்திற்குள் 30 மாவட்ட மையங்களாக உயர்த்த UIDAI திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் 2026 ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் மற்றுமொரு புதிய மையம் திறக்கப்பட உள்ளது. இது அரசின் டிஜிட்டல் சேவைகளை பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியின் முக்கிய மைல்கல்லாகும் என்றார்.