2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் தினத்தன்று எஸ்.பி.ஐ. எழுத்தர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. இதற்கிடையே, தேர்வு தேதியை மாற்றக் கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொங்கல் பண்டிகையில் எஸ்.பி.ஐ.
எஸ்.பி.ஐ. எனப்படும் இந்திய ஸ்டேட் வங்கி சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், தமிழ்நாட்டில் மொத்தம் 355 பணி இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப அண்மையில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகின.
இதை தொடர்ந்து, இதில் வெற்றி பெற்றோருக்கு முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகள் நாளை நடைபெற உள்ளது. ஆனால், ஜனவரி 15ஆம் தேதியான நாளை தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
உள்ளிருப்பு போராட்டம்:
இதனால், தமிழ்நாட்டில் உள்ள தேர்வர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன. இருந்தபோதிலும், வங்கி தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில், சு.வெங்கடேசன் எம்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் எஸ்பிஐ வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அறையில் சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரின் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், செல்லக்குமார் ஆகியோர் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
கயமைத்தனம்:
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்துவதாகத் தெரிவித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வெங்கடேசன் தெரிவித்தார். ஆனால், தேர்வு தேதியை மாற்ற முடியாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வெங்கடேசன், "தமிழர் திருநாளில் SBI முதன்மைத் தேர்வுகள் கூடாது என நேற்று 12 மணி நேரம் காத்திருந்து போராடினோம். தமிழ்நாடு முதலமைச்சரும் தொடர்ந்து முயற்சி செய்தார். ஆனால், இனிமேல் தேர்வுத்தேதியை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது மத்திய நிதியமைச்சகம்.
20 நாட்களுக்கு முன்பே தெரிந்தும் கயமைத்தனத்தை கடைபிடிக்கிறது மத்திய அரசு. எங்கள் திருநாளினை தேர்வு நாளாக்கி எங்கள் கொண்டாட்டத்தை பதற்றமாக மாற்றியிருக்கிறீர்கள். 13 000 தேர்வர்களும், பலநூறு அலுவலர்களும் நாளை பொங்கல் கொண்டாடாமல் தேர்வு மையம் நோக்கி அலைந்து கொண்டிருப்பர்.
எங்களின் பண்பாட்டையும், உரிமையையும், அவமதிப்பதும் அலட்சியப்படுத்துவதுமே பாஜக அரசின் தினசரி பணியாக இருக்கிறது. தமிழர் விரோத பாஜக வை தமிழகம். ஒருபோதும் மன்னிக்காது" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.