யூடியூப்பரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் டிவிட்டர் பதிவை வெளியிட்டார். இதுகுறித்து திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன்  மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது (124A, 153-A , 504  505 (1)b 505 ( 2)) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மாரிதாஸை கைது  மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


இதற்கிடையே  தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு மாரிதாஸ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார்.


இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முன்பாக விசாரணைக்கு வந்தது.நேற்றைய தினம் அரசுத்தரப்பிலும், மாரிதாஸ் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று புகார் அளித்த பாலகிருஷ்ணன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.




அரசுத்தரப்பில்,"முப்படைகளின் தலைமை தளபதி மரணத்தின் அடிப்படையில் தேவையற்ற கருத்தை மாரிதாஸ் முன்வைத்துள்ளார்.  மாநில அரசுக்கு எதிராகவும், அதன் நேர்மையையே கேள்விக்குள்ளாகும் வகையிலும் பதிவு செய்துள்ளார். இளம் உள்ளங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாக அவரது பதிவு உள்ளது.இது தொடர்பாக தேவையற்ற கருத்தை பதிவு செய்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.


அதற்கு நீதிபதி, "சீமான், மாரிதாஸுக்கு ஆதரவாக  கருத்து தெரிவித்ததால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்" என கருத்து தெரிவித்தார்.தொடர்ந்து, நீதிபதி, "மனுதாரர் சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்துள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் ராணுவத்தினர் சென்ற ஹெலிகாப்டர் கடந்த 8 ஆம் தேதி விபத்துள்ளாகி 10 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது தொடர்பாக தி.க மற்றும் திமுகவினர் சிலர் இமோஜிக்களை பகிர்ந்து கொண்டாடியுள்ளனர். அதனை கேள்வி கேட்கும் வகையில் மனுதாரர் திமுக ஆட்சியில் தமிழகம், காஷ்மீராக மாறுகிறதா? என கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார். 


ட்வீட் செய்த சிலமணி நேரத்தில் அவர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.மனுதாரர் தனது கருத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.மனுதாரர் தரப்பில், "மாரிதாஸ் அரசை விமர்சிப்பவர். அவரை அமைதியாக்குவதற்கே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பதியப்பட்ட பிரிவுகள் அடிப்படை ஆதாரமற்றவை என வாதிடப்பட்டுள்ளது.


புகார்தாரர் தரப்பில்," மனுதாரரின் தனது கருத்தை வெளிப்படுத்தும் உரிமை என்றாலும் அதற்கும் வரம்புகள் உண்டு. ஆளும் அரசிற்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் அவரது ட்வீட் பதிவு உள்ளது. மனுதாரர் எந்த ஆதாரமுமின்றி இத்தகைய பதிவை முன்வைத்துள்ளார். இது ஆபத்தானது. மனுதாரர் இரு குழுக்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அவரது பதிவு உள்ளது. உரிய முகாந்திரங்களுடனேயே வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தால் விசாரணை பாதிக்கப்படும்" என வாதிடப்பட்டுள்ளது.


மனுதாரரை  2 லட்சம் பேர் ட்விட்டரில்  பின்தொடர்கிறார்கள். மனுதாரர் நன்கு அறிந்தே இந்த கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் மனுதாரரது ட்வீட்டில்  பிரிவினை வாத சக்திகளை ஒடுக்க வேண்டும் என்ற தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். சாதி, மதம், மொழி, மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை.
அதோடு, ராணுவம் தொடர்பான வதந்திகளை மக்கள் பீதிக்குள்ளாகும் வகையிலும் பரப்பவில்லை. மேலும், அரசுக்கு எதிராக அவர் செயல்படவில்லை. மாநில ஒற்றுமையை காக்க வேண்டுமெனும் நோக்கிலேயே பிரிவினை வாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும் என பதிவு செய்துள்ளார். 
ஆகவே, அவர் மீது 505 1&2, 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தது செல்லாது எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.