புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தையல்காரர் ராஜீவ் காந்தி. இவர் தையல் பயிற்சிக்கு வந்த 16 வயது சிறுமியுடன் அடிக்கடி போனில் பேசி பழகி, பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில், மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜீவ் காந்திக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ராஜீவ் காந்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், சதீஷ்குமார் அமர்வு, "கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, 20 ஆண்டுகளாக குறைத்தும், 1 லட்சம் அபராதம் அதனை கட்டத்தவறினால் 3 மாத சிறைத்தண்டனை ஆகியவற்றை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.
மேலும் உத்தரவில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிகளுக்கு, மருத்துவர்கள் இரண்டு விரல் சோதனை நடத்துவது தற்போது வழக்கமாக உள்ளது. இந்த சோதனை குழந்தையின் கண்ணியத்தை மீறும் விதமாக உள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது. பல மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட, சிறுமிக்கு இரண்டு விரல் சோதனை நடத்துவதை தடை செய்துள்ளன. உச்ச நீதிமன்றம் இந்த நடைமுறையை தடை செய்துள்ளது.
மேலும் இரண்டு விரல் சோதனை என்பது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நடத்தப்படும் அறிவியலற்ற பரிசோதனை முறையாகும். இந்த சோதனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இது பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை, உடல், மன ஒருமைப்பாடு மற்றும் கண்ணியத்திற்கான உரிமையை மீறுகிறது. எனவே, பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவர்களால் நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை செய்யும் நடைமுறையை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.