மதுரையில் குப்பையில் தொலைந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை மீட்டெடுத்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர். கடின உழைப்பிலும் நேர்மை தவறாத தூய்மைப் பணியாளர் சுப்பம்மாவின் செயலை மாநகராட்சி அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

3 சவரன் தங்கச் சங்கிலியையும் குப்பை வாளியில் போட்டுள்ளார்
 
மதுரை எஸ். கொடிக்குளம், தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் வனராஜா. இவரது மனைவி ராணி. இன்று காலை ராணி தனது வீட்டில் குப்பைகளைச் சேகரித்து வைத்திருந்தபோது, தவறுதலாக மேஜையில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியையும் குப்பை வாளியில் போட்டுள்ளார். அப்பகுதியில் குப்பை சேகரிக்க வந்த கரும்பாலை பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் சுப்பம்மா என்பவரிடம் அந்த குப்பையை ஒப்படைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து செயின் காணாமல் போனதை உணர்ந்த ராணி, அதிர்ச்சியடைந்து உடனடியாகப் புதூர் மாநகராட்சி சுகாதார சூப்பர்வைசர் சரன் குமார்  அவர்களில் தகவல் தெரிவித்தார்.
 
சுப்பம்மாவின் செயலை மாநகராட்சி அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினர் 
 
சுகாதார ஆய்வாளர் உடனடியாகச்  சுப்பம்மாவை, தொடர்பு கொண்டு தங்க சங்கிலி காணாமல் போன தகவலை சொல்லி குப்பைத்தொட்டியில் தங்க சங்கிலியை தேட சொல்லி இருந்தார். அதனைத் தொடர்ந்து வனராஜா மற்றும் ராணி ஆகியோருடன் இணைந்து குப்பைத் தொட்டியில் தங்க சங்கிலியை தேடினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தேடியும் கிடைக்காததால், மனமுடைந்த வனராஜா தம்பதியினர் வீட்டிற்குத் திரும்பினர். ஆனால், சுப்பம்மா கைவிடாமல் குப்பைத் தொட்டியில் இருந்த ஒவ்வொரு கழிவையும் பொறுமையாகப் பிரித்துத் தேடினார்.
 
 சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்
 
இறுதியில், அந்த 3 சவரன் தங்கச் சங்கிலியைக் கண்டுபிடித்தார். அதனை உடனடியாகத் தனது உயர் அதிகாரிகள் முன்னிலையில் உரிமையாளரான ராணியிடம் ஒப்படைத்தார். சுப்பம்மாவின் இந்த அபாரமான நேர்மையைக் கண்டு நெகிழ்ந்த வனராஜா - ராணி தம்பதியினர்: அவருக்குச் சால்வை அணிவித்து மரியாதை செய்து அன்பின் அடையாளமாக இனிப்புகள் மற்றும் 500 ரூபாய் அன்பழிப்பாக வழங்கித் தங்களது நன்றியைத் தெரிவித்தனர். கடின உழைப்பிலும் நேர்மை தவறாத தூய்மைப் பணியாளர் சுப்பம்மாவின் செயலை மாநகராட்சி அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.