மத்திய அரசின் மூன்று வாய்ப்புகளையும் நிராகரித்து மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நிராகரித்ததோடு எப்போதும் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையோடு தமிழ்நாடு அரசு நடந்து கொள்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்த, ஒரு செங்கல் அடியில் 150 மாணவர்களை படிக்க வைக்க முடியாது என திமுக எம்பி செந்தில் பதில் கொடுக்க மீண்டும் எய்ம்ஸ் பேசுபொருளாகிறது. 


மதுரை தொப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு சேர்க்கைக்கான வாய்ப்பில்லை என தெரிகிறது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் “மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு கொடுத்த பரிந்துரைகளை ஏற்பது சாத்தியமில்லை என்பதால், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பில்லை” என கூறியுள்ளார். இதையடுத்தே அண்ணாமலை விமர்சித்துள்ளார்.




தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்க, கடந்த 2018 பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் 36 மாதங்களுக்குள் மதுரை எய்ம்ஸ் வளாக கட்டுமான பணிகளை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.




இதனிடையே மதுரையில் எய்ம்ஸ்  மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதால் அங்கு மாணவர்கள் சேர்க்கையை தொடங்கவும் அதிகாரமுள்ளது. கட்டடங்கள் இல்லையென்றாலும் கூட தற்காலிக கட்டடங்களில் அதற்கான வேலைகளை தொடங்கி பயிற்றுவித்தலை தொடங்கலாம். இதை அடிப்படையாக கொண்டு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவர் சேர்க்கையை நடப்பாண்டே தொடங்குவது குறித்து தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் பதிலளிக்க உத்தரவிட்டது. இது குறித்து தமிழ்நாடு அரசு அளித்த பதிலில் மாணவர் சேர்க்கையை தொடங்க மாநில அரசு ஆவலாக இருப்பதாகவும், மத்திய அரசு சார்பில் கட்டுமான பணிகளை விரைந்து முடித்தால் அதனை தொடங்க முடியும் என கூறப்பட்டது. உரிய வாய்ப்புகள்  இருந்தால் நடப்பாண்டு தொடங்குவதில் சிக்கலில்லை என்றும் கூறப்பட்டது.


இந்நிலையில், நடப்பாண்டே மாண்வர் சேர்க்கையை தொடங்க ஏதுவாக, மத்திய அரசு சார்பில் மூன்று வாய்ப்புகள் முன்வைக்கப்பட்டன.





  1. மாணவர்களை புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் படிக்க வைப்பது

  2. மதுரைக்கு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வைப்பது

  3. மதுரைக்கு அருகில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வைப்பது


 


செப்டம்பர் 12ல் தேர்வு பின்னர் கலந்தாய்வு தொடங்க இருப்பதால், தற்காலிக இடங்களில் மாணவர்களை சேர்த்து வகுப்புகளை தொடங்குவதே சரி என மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசின் இந்த மூன்று பரிந்துரைகளையும் தமிழ்நாடு அரசு நிராகரித்தது. குறிப்பாக மதுரையில் அமையவுள்ள கல்லூரி மாணவர்களை வேறு மாநிலத்துக்கு அனுப்புவது ஏற்புடையதல்ல என ஜிப்மர் தொடர்பான பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.


150 மாணவர்களை ஒரு வருடத்துக்கு என 3 வருடத்துக்கு 450 மாணவர்களை அருகமை அரசு கல்லூரிகளுக்கு, அதாவது மதுரை, தேனி, சிவகங்கை அனுப்பும்போது ஏற்கெனவே உள்ள மாணவர்களோடு இவர்களும் சேர்ந்து எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் புதிய மாணவர்களால் ஆய்வகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு பயிற்றுவித்தலே சரியில்லாமல் போக வாய்ப்புண்டு என வாதிடப்பட்டது.




சுயநிதி கல்லூரி பரிந்துரையை பொருத்தவரை அந்த எண்ணமே தவறு என தமிழ்நாடு அரசு நிராகரித்து விட்டது. ஏனெனில் தனியார் கல்லூரிக்கு செல்லும் போது தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கருதப்பட்டது.


மத்திய அரசின் மூன்று பரிந்துரைகளையும் நிராகரித்த தமிழ்நாடு அரசு, கடந்த ஜூலை 26ம் தேதி தனது சார்பில் ஒரு பரிந்துரையை கொடுத்தது. அதாவது எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் வரை ஒவ்வொரு ஆண்டும் தேனி, மதுரை, சிவகங்கை மருத்துவ கல்லூரிகளில் தலா 50 மாணவர்களை மதுரை எய்ம்ஸ் சார்பில் சேர்ப்பது. எய்ம்ஸ் நிர்வாகத்துக்கும் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் எந்தவிதமான இறுதி முடிவும் எட்டப்படவில்லை. ஆகஸ்ட் 17ம் தேதி பேசிய எய்ம்ஸ் இயக்குனர் “தமிழ்நாடு அரசு தேர்வு செய்து தரும் இடத்தில் உடனடியாக வகுப்புகளை தொடங்க தயார்” என கூறினார்.


தமிழ்நாடு அரசை பொருத்தவரை உரிய புரிந்துணர்வு இல்லாமல் மற்ற கல்லூரிகளில் அல்லது தனியார் நிறுவனங்களில் அவசர அவசரமாக மாணவர்களை அமர்த்தி சேர்க்கை நடத்துவது ஏற்புடையதல்ல என்றும் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை முழுமையாக முடித்து விட்டு மாணவர் சேர்க்கை நடத்துவது இன்னும் நலம் என யோசிக்கிறது. நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைப் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கை இந்தாண்டு வாய்ப்பில்லை என தெரிகிறது.