மதுரை ஆதினம் உடல் புதைக்கும் இடத்தை மாற்றகோரி குத்தகைதாரர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


மறைந்த மதுரை ஆதினத்தின் பூத உடலை அடக்கம் செய்யகூடிய இடத்தினை கோவை காமாட்சிபுரி ஆதினம் , தர்மபுரம் ஆதீன தம்புரான் நேரில் பார்வையிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மதுரை முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள மதுரை ஆதினத்திற்கு சொந்தமான இடத்தில் மறைந்த ஆதினத்தின் உடலை அடக்கம் செய்வதற்காக ஏற்பாடு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மதுரை ஆதினத்திற்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு பெற்ற குபேந்திரன் என்பவர், அங்கு ஆதீனம் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்.  மாற்று இடத்தில் அடக்கம் செய்யுமாறு அவர் கூறியதால் ஆதினம் தரப்பினருக்கும் - குத்தகைதார தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 




இதையடுத்து அங்கு போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இதையடுத்து கோவை காமாட்சிபுர ஆதினம் , இந்த முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா ஜி நேரில் வந்து பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் தற்போது நல்லடக்கம் செய்வதற்கான இடத்தில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நல்லடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். குத்தகைதாரர் தரப்பு தற்போது வரை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. 




இது குறித்து பேசிய கோவை காமாட்சிபுரி ஆதினம், ‛‛ மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் ஆதீனம் உடல் நல்லடக்கம் செய்யப் படுவதற்கு குத்தகைதாரர் எதிர்ப்பு தெரிவித்தார். எங்களது எதிர்ப்பை தொடர்ந்து காவல்துறை ஒத்துழைப்புடன் பணி நடைபெறுவதாகவும் ,  தமிழகம் முழுவதும் ஆதீனங்களின் சொத்துக்கள் இது போன்று ஆக்கிரமிக்க படுவதாகவும் , அரசு சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காது எனவும்,’’ தெரிவித்தார்.


 


மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானது தொடர்பான செய்தி:


"மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகசம்பந்த தேசிக பராமாசாரிய சாமிகள்" என்று போற்றப்படுவர் தான் மதுரை 292- வது ஆதீனம் அருணகிரிநாதர். எம்.ஜி.ஆர், கருணாநிதி, பழ.நெடுமாறன், ஜெயலலிதா உட்பட பல்வேறு அரசியல், திரை பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது. ஆதீனம் அருணகிரிநாதர் தமிழையும், சைவத்தையும் இரு கண்களாக நினைத்து செயல்பட்டவர் என போற்றப்படுகிறார். உலக முன்னணி நாடுகளுக்கு சென்று ஆங்கில சொற்பொழிவும் ஆற்றியுள்ளார். தமிழ்நாட்டில் முக்கிய நபர்களில் வரிசைப்பட்டியலில் இருக்கும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு கடந்த சில வருடங்களாக உடல் நலம்குறைவாக இருந்தது.


77 வயதுடைய அருணகிரிநாதர் கடந்த 8-ம் தேதி சுவாசக்கோளாறு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவ மனையில் இரவு  9:33 அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரின் நிலை சவாலாக இருந்ததால் 12-ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று 13-ம் தேதி இரவு சுமார் 9:15 மணிக்கு உயிரிழந்தாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக நள்ளிரவில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீனம் மடத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆதீனத்தின் உடலுக்கு கோவை காமாட்சிபுர ஆதீனம் மற்றும் திருவாடுதுறை ஆதீனம் , இளைய மதுரை ஆதீனம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினா். இதனையடுத்து அவரது மடத்தின் உட்புறத்தில் உடலானது சித்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இதற்காக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.