ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:
ஆன்லைன் சூதாட்டத்தில் தோல்வி அடைந்ததன் விளைவாக பலர் தற்கொலை செய்து கொள்வதை கருத்தில் கொண்டு, அதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்த சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை எனவும், திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால், இந்த சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அரசுத்தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து:
மனுதாரர்கள் தரப்பிலும், அரசுத்தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என குறிப்பிட்ட நீதிபதிகள், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கடந்து வந்த பாதை:
தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. 131 நாட்கள் கழித்து, கடந்த மார்ச் 6ஆம் தேதி, ஆளுநர் அந்த மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
கடந்த மார்ச் 23ஆம் தேதி சட்டப்பேரவையில் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அடுத்த நாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தின்படி, ஆன்லைன் விளையாட்டு விளையாடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ. 5 ஆயிரம் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுக்கு விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ. 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட்டது.
இதுபோன்ற விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு, 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட்டது. இவர்கள் மீண்டும் தவறு செய்தால், 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.