அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டப்பட்டவர் என்றும் அதனை ஆளுநர் மீற முடியாது என்றும் சென்னை உயர் நீதின்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த கருத்தை தெரிவித்துள்ளது. 


தன்னை முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துவிட்டார் என்றும் எனவே, உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி வீரபாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 


ஆளுநர் vs எதிர்க்கட்சி மாநிலங்கள்:


இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டப்பட்டவர் என கூறி, மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து அதிகார போட்டி நிலவி வருகிறது. கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, பஞ்சாப், மேற்குவங்கம் என ஆளுநர் - அரசாங்கம் மோதல் நீடிக்கும் மாநிலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலதாமதம் செய்வதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன.


உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?


சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் முக்கிய மசோதாக்களை அவர் வேண்டுமென்றே தாமதிப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.


பஞ்சாப் அரசு தொடர்ந்த ஒரு வழக்கில், "திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவில் திருத்தம் மேற்கொண்டோ அல்லது திருத்தம் மேற்கொள்ளாமலோ மாநில அரசு அதை திருப்பி அனுப்பினால், ஆளுநருக்கு வேறு வழியும் இல்லை. அதிகாரமும் இல்லை. அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும்" என மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக உச்ச நீதிமன்றம் தீரப்பு வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. 


இதையும் படிக்க: புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?