சென்னையில் வேல் யாத்திரை நடத்தக் கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்னிறுத்தி பேரணி நடத்த பாரத் இந்து முன்னணி அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக பாரத் இந்து முன்னணி சார்பில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பின் வட சென்னை மாவட்ட துணை தலைவர் எஸ். யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு:
Just In




அதில், மதுரை மாவட்டத்தில் இருக்க கூடிய திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலை என்றும் அதனை இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடி வருவதாகவும் அந்த மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோவில் வரை பிப்ரவரி 18ஆம் தேதி வேல் பேரணி நடத்த அனுமதியளிக்க காவல்துறை உத்தரவிடவேண்டும் என கேட்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே திருப்பரங்குன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழிபாதை, நெல்லித் தோப்பு ஆகியவை இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது அவசியமற்றது என தெரிவித்தார்.
மேலும், பேரணி பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலை என்கிற காரணம் மட்டுமின்றி வேறு எந்த இடத்தில் பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும் எனவும் வாதிட்டார்.
"கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியாது"
ஏற்கனவே, மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் அதே பிரச்சனைக்காக பேரணி நடத்துவதை நீதிமன்றம் ஊக்குவிக்க கூடாது என்றும் தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட நீதிமன்ற நிபந்தனையை மீறி பொது அமைதிக்கும் மத நல்லிணத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளதாகவும் அதற்காக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மக்கள் மத வேறுபாடின்றி ஒரே சமுதாயமாக வாழ்ந்து வரும் நிலையில், மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் எல்லோருடைய மத நம்பிக்கைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் யாருடைய இடையூறுமின்றி பாதுகாக்கும் என்றார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கருத்து சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த போராட்டகாரர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் தவறாக பயன்படுத்த முடியாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.