சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குக் கட்டுப்பாடு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
’’சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன வார்த்தைகூட பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா?
பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை
ஆதவ் அர்ஜூனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவதுபோல கருத்துப் பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்குக் காத்திருக்கிறீர்களா?’’
இவ்வாறு நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
கரூரில் 41 பேரில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் வலைதளத்தில் ’’எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும் GenZ தலைமுறையும் ஒன்று கூடி அதிகாரத்திற்கு எதிராக புரட்சியை உருவாக்கி காட்டினார்களோ அதே போல் இங்கும் எழும் என்றும்".
"ஆளும் கட்சியின் அடிவருடிகளாக காவல்துறை மாறிப் போனால் மீட்சிக்கு புரட்சிதான் ஒரே வழி'' என, பதிவிட்டு இருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த பதிவை நீக்கினார். இதற்கிடையே ஆதவ் அர்ஜுனா தமிழ் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பி பதிவிட்டதாகக் கடும் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.