சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சய். வி.  கங்கபூர்வாலா நாளை (மே 23) பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவன் மே 24 முதல் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


யார் இந்த ஆர்.மகாதேவன்?


1963ஆம் ஆண்டு பிறந்த ஆர்.மகாதேவன், 1989ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.


சிவில், கிரிமினல் வழக்குகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த நீதிபதி மகாதேவன், மத்திய, மாநில அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி உள்ளார்.


சென்னை சட்டக் கல்லூரியில் படித்த நீதிபதி மகாதேவன், 1989ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 25 ஆண்டுகளாகச் சட்டப் பணியாற்றி வரும் இவர், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு மேல் நடத்தி உள்ளார்.


சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி


கடந்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலாவை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.  இந்த நியமனம் மூலம், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு முழு நேர தலைமை நீதிபதி கிடைத்தது.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்ற பிறகு, 9 மாதங்களாக முழு நேர தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது. அதன் பிறகு, நீதிபதி துரைசாமி, நீதிபதி டி. ராஜா மற்றும் தற்போது நீதிபதி வைத்தியநாதன் ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தனர். அதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா நியமனம் செய்யப்பட்டார்.


இந்நிலையில் அவர் நாளையுடன் (மே 23) ஓய்வுபெறும் நிலையில், தலைமை நீதிபதி பதவி மீண்டும் காலியாக உள்ளது. இதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவன் மே 24 முதல் பணியாற்ற உள்ளார்.