தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு வழங்கப்படும் 7. 5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டை ஏன் அரசு உதவி பெறும் பள்ளிக்கும் வழங்க கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


வழக்கு:


ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த பூபேஷ் என்பவர் , மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் மனுவில் தெரிவித்திருந்ததாவது, “ ராமநாதபுரம் மாவட்ட நகர்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை. இதன் காரணமாக, இந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


விசாரணை:


இந்நிலையில், இந்த பொதுநல வழக்கானது, மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது” அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கே இளங்கலை மருத்துவ படிப்பில் 7. 5 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால், அனைத்து தாலுகாக்கள் அல்லது மாவட்ட தலைநகரங்களில் அரசு பள்ளிகளை நிறுவ வேண்டும்” என மனுதாரர் தெரிவித்தார்.


மேலும், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது “ ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 2 அரசு உதவி பெறும் இருபாலர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு:


அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது “ மருத்துவ படிப்பில் வழங்கப்படும் 7. 5% சதவிகித இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் , இதுகுறித்து முடிவு எடுப்பதற்கு , இதுவே சரியான தருணம் என்றும் இதுகுறித்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் அக்டோபர் 14 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.