TVK MLA COURT CASE: விஜய்க்கு ஷாக்.! தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை.! நீதிமன்றம் அதிரடி
TVK MLA CASE: நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டபேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

ஒரு ஓட்டில் பெரிய கருப்பன் தோல்வி
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டியானது உருவானது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தி தவெக வெற்றி பெற்றது. எதிர்கட்சியாக இருந்த அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கூட்டணி கட்சிகளோடு இணைந்து 53 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. அதே நேரம் திமுக 73 தொகுதிகளிலும், தவெக 108 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகளின் உதவியோடு முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.
இந்த சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்ற சம்பவம் நாடு முழுவதும் திரும்பி பார்க்க வைத்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்காக இல்லாமல் தவித்த தவெக திமுகவின் கூட்டணி கட்சிகளின் உதவியை நாடியது. இந்த நிலையில் தவெகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய உத்தரவை நீதிமன்றம் அளித்துள்ளது. அந்த வகையில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 ஓட்டுகளை பெற்றிருந்தார். திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர். பெரியகருப்பன் 83,374 ஓட்டுகள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது. அதே நேரம் தபால் வாக்குகள் எண்ணுவதில் குளறுபடி ஏற்பட்டதாக திமுக சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதனையடுத்து சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, எம்.எல்.ஏ.வாக சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க கோரி தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு செல்ல வேண்டிய தபால் வாக்குகள் வேறு திருப்பத்தூருக்கு அனுப்பப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை தேர்தல் ஆணையம் முற்றிலுமாக மறுத்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று செனை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமார் அமர்வு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை
அந்த வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டபேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேர்தல் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் அந்த உத்தரவில் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 26க்கு தள்ளிவைத்தனர். நீதிமன்ற உத்தரவால் தவெக எம்எல்ஏ நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதுமட்டுமில்லாமல் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது என்ற உத்தரவால் தவெகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இந்த உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தவெகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்




















