மழைக் காலத்தில் சென்னையில் மெட்ராஸ் ஐ(Madras Eye) என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி சென்னையில் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் மத்தியில் இது வேகமாகப் பரவி வருகிறது. 


ஒவ்வோர் ஆண்டும் பருவ மழைக்காலம் முடிவுக்கு வரும்போது கண் வெண்படல அழற்சி பாதிப்பு சற்றே அதிகரிக்கும். இந்த ஆண்டு சென்னை நகரில் மழைக் காலம் நீடித்திருப்பது மெட்ராஸ் ஐ பாதிப்பு எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. சமீப வாரங்களில் சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளிகளுள் 20% -க்கும் அதிகமான நபர்களுக்கு கண் வெண்படல அழற்சி (மெட்ராஸ் ஐ) இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.” என்று 


இதுகுறித்து சென்னை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவின் மண்டலத் தலைவரும், முதுநிலை கண் மருத்துவருமான ஆர்.கலா தேவி கூறியதாவது: 


’’கண் வெண்படல அழற்சி அல்லது மெட்ராஸ் ஐ என்பது, ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய் பாதிப்பாகும். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது. ஏறக்குறைய 90%  தொற்று அடினோவைரஸ் என்பதனால் ஏற்படுகிறது. கண்ணில் இருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக மெட்ராஸ் ஐ பரவுகிறது. 


ஒரு நபர் அவரது கண்ணைத் தொடும்போது, தொற்றிப் பரவக்கூடிய வைரஸ் அல்லது பாக்டீரியாவை கண் சுரப்போடு தொடர்புகொள்ளக் கூடிய வேறொரு நபருக்கு அல்லது பொருளுக்கு கடத்திவிடுவார். ஆனால், ஒவ்வாமையினால் ஏற்படும் மெட்ராஸ் ஐ மற்றும் வேதிப்பொருட்களால் வரக்கூடிய கண் அழற்சி ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்குப் பரவுவதில்லை.  




என்ன அறிகுறிகள்?


* கண் எரிச்சல், 
* நீர் வடிதல், 
* கண் சிவத்தல், 
* ஒட்டிக்கொள்கிறவாறு கண்ணில் இருந்து அழுக்கு  வெளியேற்றம்
* வெளிச்சத்தைப் பார்க்க கூச்சம் 


ஆகியவை பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன.  


ஆனால், கண்ணின் கருப்பு நிறப் படலத்தின் மீதான அடுக்கான கருவிழியில் தொற்று இருக்குமானால், அதன் காரணமாக மங்கலான பார்வை ஏற்படக்கூடும்.  தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட இந்த வைரல் தொற்று, சில நோயாளிகள் மத்தியில் கண் வீக்கம் மற்றும் அழற்சியை ஏற்படுத்துகிறது. இப்பாதிப்புகள் குணமாவதற்கு அவர்களுக்கு நீண்டகாலம் எடுக்கிறது.  


மெட்ராஸ் ஐ என்பது, பொதுவாக ஒரு சிறிய கண் தொற்றுதான். ஆனாலும் அதை சரியாக பரிசோதனையில் உறுதிசெய்து உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் அதிக தீவிரமான பிரச்சனையாக மாறக்கூடும். 


என்ன செய்யக் கூடாது?


* மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள மருந்து கடையிலிருந்து சுயமாக மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.


* ஓடிசி மருந்து என அழைக்கப்படும் கண் சொட்டு மருந்துகளையும் உபயோகிப்பதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.  


* உரிய பரிசோதனை மற்றும் நோய் உறுதி செயல்பாட்டிற்குப் பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  




வேகமாகப் பரவும் தொற்று


மெட்ராஸ் ஐ என்பது மிக அதிகமாகவும், வேகமாகவும் பரவக்கூடிய ஒரு தொற்றாகும். துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற தனிப்பட்ட பொருட்களின் வழியாக ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு இது எளிதாகப் பரவக்கூடியது.  ஆகவே, இத்தொற்று பாதிப்புள்ள நபரை தனிமைப்படுத்துதல் முக்கியமானது.  


என்ன செய்ய வேண்டும்?


* மெட்ராஸ் ஐ தொற்றுள்ள நோயாளிகள், அவர்களது கண்களிலிருந்து வரும் திரவத்தைத் துடைக்க பேப்பர் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 


* பயன்படுத்திய நாப்கின்களை உடனடியாக பத்திரமாக அகற்றிவிட வேண்டும்.  


* தொற்று ஏற்படும்போது பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு, மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணியவேண்டும்.  


* வழக்கமாக பயன்படுத்துகின்ற, திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய கைக்குட்டைகளை இந்த நோயாளிகள் பயன்படுத்தக்கூடாது.  


* தங்களது கைகளை அவர்கள் அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.


* தொற்றுப் பரவாமல் தடுக்க, தங்களது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருட்களை பிறர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. 


* பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற மூடப்பட்ட அமைவிடச் சூழல்களில் இது வேகமாக பரவக்கூடியது என்பதால், வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே தனித்திருப்பது நல்லது’’.


இவ்வாறு மருத்துவர் ஆர்.கலா தேவி தெரிவித்துள்ளார்.