காலை நேர சிற்றுண்டி உடல் நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் இன்றுள்ள பரபரப்பான நிலையில் மாணவர்களும், இளைஞர்களும், ஏன் வயதானவர்களும் கூட காலை நேர சிற்றுண்டியை தவிர்த்து வருகின்றனர். நேரமின்மை, வசதியின்மை ஆகிய காரணங்களால் இவை தவிர்க்கப்பட்டிருந்தாலும், குழந்தைகளின் உடல் நலத்தை எந்த வகையிலும் இது பாதிக்கக்கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலுள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி பள்ளியிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


அரசு பள்ளிகளில் காலை நேர சிற்றுண்டி :






கடந்த மே மாதம் ஏழாம் நாள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு சட்டப்பேரவையில் விதி 110 இன் கீழ் மு.க.ஸ்டாலின் ஐந்து முக்கிய திட்டங்களை அறிவித்தார். அத்திட்டங்களில் ஒன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும் திட்டம். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், காலை உணவு சாப்பிடுவதில்லை. பள்ளியின் தொலைவு மட்டுமின்றி குடும்ப சூழலும் ஒரு காரணமாக இருப்பதால், இதனை மனதில் வைத்துக் கொண்டு இத்திட்டத்தை தீட்டி இருப்பதாக முதல்வர் குறிப்பிட்டிருந்தார். ஒன்று முதல் ஐந்து வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றை சுய உதவி குழு மூலமாக உணவு சமைத்து உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நிலையாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன்படி காலை 8.15 மணி முதல் 8.45 மணி வரை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், இதன் மூலம் குழந்தைகளின் உடல்நலமும்,கல்வி பயிலும் ஆற்றலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பதற்காக
காமராஜர் உருவாக்கிய மதிய உணவுத் திட்டத்தின் தொடர்ச்சியாகவும் இதனைப் பார்க்கலாம். மாணவர்கள் எந்த வித தங்கு தடையும் இன்றி கல்வி கற்பதற்காக மதிய உணவுடன் சேர்த்து காலை நேர சிற்றுண்டியும் பள்ளிகளில் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களும் பெற்றோர்களும் நலன் பெறுவர் என்று நம்பப்படுகிறது. விரைவில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.