சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்புகள் குவிந்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


சனாதனம் குறித்து உதயநிதி பேசியது என்ன? 


சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கில்  கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி  தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் திமுக கழக இளைஞர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.  


இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “சனாதன ஒழிப்பு மாநாடு என்ற இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. நீங்கள் `சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு முதலில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. உதாரணமாக கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்.


சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் செயல் ஆகும்.சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். அது சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. மக்களை ஜாதிகளாகப் பிரித்து தனித்தனியாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம். ஆனால், கலைஞர் கருணாநிதி எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி அந்த இடத்திற்கு, `சமத்துவபுரம்’ என்று பெயர் வைத்து சனாதனத்திற்குச் சம்மட்டி  அடி கொடுத்தார். ஆகவே சனாதனம் வீழட்டும், திராவிடம் வெல்லட்டும் என்று கூறியிருந்தார். 


கடும் எதிர்ப்பு 


அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய உள்துறை அமித்ஷா தொடங்கி பல்வேறு கட்சி தலைவர்கள், சாமியார்கள் என பலரும் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் டெல்லி, பிகார் ஆகிய மாநிலங்களில் உதயநிதி மீது வழக்கும் தொடரப்பட்டது. இதனிடையே உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ஸ ஆச்சாரியார்   அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் கிழித்து, தீயிட்டு எரித்து, காலால் மிதித்து தனது எதிர்ப்பினை தெரிவித்தார். மேலும்  அமைச்சர் உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூபாய் 10 கோடி கொடுக்கவுள்ளதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 






இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி, 10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே  சீவி கொள்கிறேன் என கிண்டலாக பதிலடி கொடுத்தார். இப்படியான நிலையில், உதயநிதி பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


வைரமுத்து ட்வீட்


 அதில், “சனாதனம் என்பதும் சனாதன எதிர்ப்பு என்பதும் காலங்காலமான கருத்துருவங்கள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு என்பது சனாதனக் கருத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு திருக்குறளைத்தான் உதயநிதி பேசியிருக்கிறார் திருவள்ளுவரைக் கொண்டாடுகிறவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன்? .. அரசியல்..!” என வைரமுத்து தெரிவித்துள்ளார்.