இந்த ஆண்டு சந்திர கிரகணம் நாளை அதாவது மார்ச் 25 ஆம் தேதி நிகழ உள்ளது. நாளை பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. அதுமட்டுமின்றி நாளை ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால் நாளை வரும் சந்திர கிரகணம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.


சந்திர கிரகணம்:


"சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். கிரகணம் வெறும் நிழல்தான். சூரியனை மறைக்கும் நிலவின் நிழல் பூமியில் விழுவது சூரிய கிரகணம், பூமியின் நிழல் நிலவில் விழுவது சந்திர கிரகணம். [சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது.


சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.  நாளை வரும் சந்திர கிரகணம் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஆகும் இதனை பெனும்பிரல் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஏற்படும் முதல் சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக ஏற்பட உள்ளது. இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும் வகையில் ஏற்பட உள்ளது. கிட்டத்தட்ட 4 மணிநேரம் இந்த கிரகணம் நிகழ உள்ளது.


இந்தியாவில் பார்க்க முடியுமா?


இந்த சந்திர கிரகண நிகழ்வானது காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடிவடைகிறது. இது பகல் நேரத்தில் ஏற்படுவதால் இந்தியாவில் இதனை பார்க்க முடியாது. மேலும் நாளை பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை என்பதால் கோயில் நடை அடைக்கப்படாது.  


நாளை நடக்க இருக்கும் சந்திர கிரகணம் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் இந்த சந்திர கிரணத்தை காண முடியும். சந்திர கிரகணத்தை அடுத்து, 15 நாட்களில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது.