வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் டெல்டாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இன்று மாலையில் இருந்து தமிழ்நாட்டில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழு மண்டலம் இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடலூர், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் கனமழை பெய்யும்.
நாளை மறுநாள் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுவை, காரைக்கால் பகுதியில் மிதமான மழை இருக்கும்.
அதேபோல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுவை காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
28ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டஙக்ள் புதுவை காரைக்காலில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும்.
மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளார்கள்.
இதனிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் சென்னை, கடலூர், பாம்பன், எண்ணூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மழையால் பாதிக்கப்படும் மக்களுக்காக தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.