உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
தருமபுரியில் ஸ்டாலின் பரப்புரை:
அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று தருமபுரியில் பரப்புரையை மேற்கொண்டார். தருமபுரியில் தடங்கம் கிராமத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை அடுத்த, பொதுகூட்டத்தில் பேசிய அவர், "எழுச்சிமிக்க தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை ஒரு மாநாடு போல் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் இது.
ஜனநாயகத்துக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும், எதிர்கால சந்ததியினரை காக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும். அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பாஜக என்பது சமூகநீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சி. பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை சமூக நிதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் பெரும் பங்கு உண்டு” என்றார் ஸ்டாலின்.
”சமூக நீதிக்கு எதிராக உள்ள பாஜகவுடன் கைகோர்த்ததன் மர்மம் என்ன?
தொடர்ந்து பேசிய அவர், "ஆதி திராவிடர், பழங்குடியினர் மக்களை சமூக பொருளாதாரம், கல்வியில் உயர்த்த அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. நான் பெரிதும் மதிக்கின்ற சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது பாஜகவுடன் எப்படி கூட்டணி அமைத்தார்?
சமூக நிதி பேசும் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிராக உள்ள பாஜகவுடன் கைகோர்த்ததன் மர்மம் என்ன? பாமக வலியுறுத்தும் கொள்கைகளில் ஒன்றைக் கூட ஆதரிக்காத பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தது ஏன்? பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் ஏன் சென்றார் என்பது அவர்களின் கட்சிக்காரர்களுக்கே தெரியும்.
மனது இல்லாமல் பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் சென்றார் என்பது பாமகவினருக்கே தெரியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாமகவுக்கு மோடி கியாரண்டி கொடுத்தாரா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான உத்தரவாதத்தை மோடியிடமோ, அமித்ஷாவிடமோ ராமதாஸ் பெற்றிருக்கிறாரா? சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் வாக்குறுதி கொடுத்த ஒரே தேசியக் கட்சி காங்கிரஸ். பாஜக பற்றி தெரிந்தே அவர்களின் கூட்டணிக்கு ராமதாஸ் சென்றுள்ளார்.
திராவிட மாடல் அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் நல்லாட்சியை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டைப் போன்று டெல்லியிலும் நல்லாட்சி மலர வேண்டும் என பாடுபட்டு வருகிறோம். மக்கள் விரோத பாஜக அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.