மே 29 ஆம் தேதி முதல் வாக்கு எண்ணும் மையங்களில் பணி செய்யக்கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் வாக்கு எண்ணும் பணிக்கு கூடுதல் மேற்பார்வையாளர்கள் பணியமர்த்தபட உள்ளதாகவும் மாவட்டத் தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர், உதவியாளர் உள்ளிட்டவர்களை முதற்கட்ட கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி, சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே, முன்னிலையில் நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது:


’’ஜூன் 1 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் பூத் ஏஜென்ட்களின் பட்டியல் அளித்தால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். ஜூன் 4 ஆம் தேதி வாக்கும் எண்ணும் பணி நடைபெற உள்ளது. அந்த வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு முதற்கட்ட கணினி குழுக்கள் முறை தேர்வு இன்று நிறைவடைந்து அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கும் சேர்த்து நுண் பார்வையாளர்கள் 357 பேர் தேவை, மேற்பார்வையாளர்கள் 374, உதவியாளர்கள் 380 பேர் தேவை, அவர்களை கணினி குழுக்கள் முறையில் எந்தெந்த பகுதியில் எந்தெந்த மேஜையில் பணி செய்ய உள்ளார்கள் என்று வரிசைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.


மே 29 ஆம் தேதி பயிற்சி


இவர்களுடன் அலுவலக உதவியாளர் 322 பேரும் என மொத்தம் 1433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட தேவைப்படுகிறார்கள்.மூன்று வாக்கு எண்ணும் மையங்களையும் சேர்த்து, மே 29 ஆம் தேதி புதன்கிழமை வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.


இரண்டாவது முறை ஜூன் 3 ஆம் தேதி 8 மணி அளவில் எந்த நாடாளுமன்ற தொகுதிக்கு செல்கிறார்கள் என்றும், ஜூன் 4 ஆம் தேதி காலை 5 மணிக்கு எந்த மேஜைக்கு செல்வார்கள் என்றும் தேர்வு செய்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.


வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன, ஒரு மேஜைக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்படும் பணி இன்று ஆய்வு செய்யப்பட்டது.


1384 பேர் பாதுகாப்பு பணியில் தற்போது மூன்று சுற்றுகளில் பணியாற்றுகிறார்கள். இதுமட்டுமில்லாமல், வாக்கு எண்ணும் நாளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படும் செய்யப்படும், தற்போது குயின் மேரிஸ் கல்லூரியில் 176 கேமராக்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் 210 கேமராக்கள், லயோலா கல்லூரியில் 198 கேமராக்கள் என மொத்தம் 584 கேமராக்கள் உள்ளன.


106 கேமராக்கள் சென்னை வடக்கிலும், 132 கேமராக்கள் சென்னை தெற்கிலும், 107 கேமராக்கள் மத்திய சென்னையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதலாக பொருத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


தபால் வாக்குகளை எண்ணுவதற்கும் ஏற்பாடுகள்


வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள மேஜைகளில் ஒவ்வொன்றுக்கும் ஒன்று வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதேபோல் தபால் வாக்குகளை எண்ணுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கப் போகும் அனைவருக்கும் குறிப்பாக, வாக்கு என்னும் பணியாளர்கள் காவல்துறை வருவாய்த்துறை பணியாளர்கள் என உணவு, கழிப்பறை உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.


நுண்பார்வையாளர் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் வங்கி ஊழியர்களாகவும், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கல்வி துறையில் பணியாற்றுபவர்களாக இருப்பார்கள், இவர்களுக்கான பயிற்சி அடுத்த இரு நாட்களுக்கு பிறகு தொடர்ந்து அளிக்கப்படும்.


கூடுதலாக வாக்கு எண்ணும் மையங்களில் 3 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள், அவர்கள் பற்றிய தகவல் இது ஜூன் 1 ஆம் தேதி அளவில் அளிக்கப்படும்.


வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்தில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட உள்ளன. கடந்த வாரம் பூத் ஏஜென்டுகள் உடன் அந்தந்த தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூட்டம் நடத்தினர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். ஜூன் 1ஆம் தேதிக்குள் அந்தந்த அரசியல் கட்சிகள் சார்ந்த பூத் ஏஜென்ட்கள் யார் எந்த பூத்களுக்கு வர உள்ளார்கள் என்று அந்தந்த அரசியல் கட்சிகள்  தெரிவித்தால், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்’’.


இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.