தமிழ், ஆங்கிலம், இந்தி என பாராளுமன்றத்தில் யார் எந்த மொழியில் பேசினாலும், அவர்களுக்கு பதிலடி கொடுப்பேன் என உரையாற்றி ஆச்சரியமூட்டிய கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேல் பேச்சுக்கு தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.
கரூர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாநகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேல் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தேமுதிக, எஸ்டிபிஐ, ஃபார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும், அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீண்டும் காப்பி அடித்துள்ளதாக பேசினார்.
அவரைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய கரூர் தொகுதி வேட்பாளர் தங்கவேல், ”66 வயதை கடந்த நான் இதற்கு மேல் குடும்பத்திற்கு சேவை செய்யும் சூழ்நிலை இல்லை. கரூர் தொகுதி மக்களுக்காக உழைப்பேன். பாராளுமன்றத்தில் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று எனக்கு முன்னால் பேசிய அனைவரும் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டால் தமிழில் பேசுபவர்களுக்கு, தமிழில் பதிலடி கொடுப்பேன். ஆங்கிலத்தில் பேசுபவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிப்பேன். நமது இயக்கத்தின் கொள்கை தமிழகத்தை பொறுத்தவரை தாய்மொழி தமிழ் என்றும், இணைப்பு மொழி ஆங்கிலம் என நமது தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வழி காட்டியுள்ளனர். அந்த பாணியை பின்பற்றுபவன் நான். அதேசமயம் எனக்கு இந்தியும் தெரியும். பாராளுமன்றத்தில் இந்தியில் பேசுபவர்களுக்கு இந்தியிலும் பதில் அளிப்பேன். கரூர் பாராளுமன்ற தொகுதியில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் குரல் கொடுப்பேன்” என்றார்.