பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்த விவாகரத்தில் தற்கொலை செய்து கொண்ட குப்புசாமி மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுகவின் டுவிட்டர் பக்கத்தில், ‘பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்த விவாகரத்தில் புகார் அளித்த திருத்தணி நந்தன் மீதே வழக்கு பதிவு செய்தது காவல் துறை, இதனால் மன உளைச்சல் அடைந்த அவரது மகன் குப்புசாமி தீக்குளித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்னாரது மறைவிற்கும் அவரது குடும்பத்தினற்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்’ எனப் பதிவிட்டுள்ளது.
மேலும், ‘பொங்கல் தொகுப்பில் உள்ள குறைகளை அஇஅதிமுக பல முறை சுட்டி காட்டியும் மௌனியாக இருந்த ஊடக நண்பர்கள், கேள்வி கேட்டதால் மட்டுமே வழக்கு பதிவு செய்து குப்புசாமியை தற்கொலைக்கு தள்ளியிருக்கும் இந்த ஜனநாயகத்திற்கு எதிரான இச்செயலையாவது கண்டிப்பீர்களா,இந்த மரணத்திற்காவது உரிய நீதி கிடைக்குமா?’ என்றும் பதிவிட்டுள்ளது.
நடந்து என்ன?
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கியதில் புளியில் பல்லி இருந்ததாக நந்தன் என்பவர் கடைக்காரரிடம் கேட்டபோது முறையான தகவல் கிடைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அவதூறு பரப்பியதாக ரேஷன் கடை ஊழியர் கொடுத்த புகாரின் மீது நந்தன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.இது திருத்தணி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நந்தன் மற்றும் அவரது குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இந்நிலையில், நந்தனின் மகன் குப்புசாமி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது திருத்தணி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்