சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட  பொருட்களை, பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சமூக ஆர்வலர் கடிதம் எழுதியுள்ளார்.


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு:


சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 18 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என, கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட  பொருட்களை ஏலம் விட்டு அதில் வரும் நிதியை கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கிற்கு செலவிட்ட தொகையை அரசு ஈடு செய்ய வேண்டுமென பெங்களூரு சிட்டி சிவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


பொருட்களை ஏலம் விட உத்தரவு:


அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மாநகர சிவில் மற்றும் செஷன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு சரியானது எனவும், உடனடியாக கர்நாடகா அரசு மற்றும் நீதித்துறை சிறப்பு வழக்கறிஞரை நியமித்து அனைத்து சொத்துகளையும் ஏலம் விட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட,  கிரண் எஸ் ஜவாலி என்ற வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டது.


லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எழுதிய கடிதம்:


இந்நிலையில் நரசிம்ம மூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெயலலிதா பொருட்களை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தங்கம், வைரம்,  மற்றும் கற்கள் பதித்தது என ஜெயலலிதாவின் 30 கிலோ நகைகள் மட்டுமே கர்நாடக அரசின் கரூவுலத்தில் உள்ளது. மீதமுள்ள பொருட்களின் விவரங்கள் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கு விசாரணையை தொடங்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் உள்ள, ஜெயலலிதாவின் மற்ற பொருட்களை சட்டப்படி விரைந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள்:


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற சோதனையின் போது, வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த புடவைகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சி பெட்டிகள், 8 சிவிஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.