National Press Day 2022: தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்வர் உட்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய பத்திரிகை கவுன்சில், சட்டப்பூர்வ நிறுவப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா செயல்படத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாள் இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகை இருப்பதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என ஊடகங்கள் அறியப்படுகின்றன என்பது நடைமுறை உண்மையாகும்.
தேசிய பத்திரிகை தினத்தினையொட்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு #NationalPressDay வாழ்த்துகள்! சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு, என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது வாழ்த்துக் குறிப்பில், நம் ஐனநாயகத்தின் தூண்களாக துணிவுடன் உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாக பணியாற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இத்தினத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமாக உள்ள அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள வாழ்த்தில், “இந்திய பிரஸ் கவுன்சில் 56 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நாள் இன்று. தேசிய பத்திரிகையாளர் நாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் நடுவில் பணியாற்றும் நான்காவது தூணான ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்துக் குறிப்பில், கத்தி முனையை விட பேனா வலிமையானது. பேனா முனைகள் இல்லாமல் இந்திய ஜனநாயகம் இல்லை. நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய 3 தூண்களுடன் இணைந்து ஜனநாயகத்தைக் காக்கும் நான்காவது தூண்களுக்கு தேசிய பத்திரிகையாளர் நாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ள தனது வாழ்த்தில், குரலற்றவர்கள் குரலாய், சமூக முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றி வரும் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பை, தேசிய பத்திரிகை தினத்தில் நினைவு கூர்ந்து, உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ள தனது வாழ்த்துச் செய்தியில், ஜனநாயகம் ஆரோக்கியமாக இருப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தினத்தில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற துறையில் இருப்பவர்களைப் போலவே ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாத்திடுவது அவசியமாகும். அதற்கு வழிகாட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் அமையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.