மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட், எந்த புதிய அறிவிப்பும் இடம்பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் தாக்கல் தொடங்கிய சில நிமிடங்களிலே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன் பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 


”தொடர்ந்து பொய் வழக்கு, நெல் கொள்முதல் செய்யாதது, நிலக்கரி நிறுவனத்திற்காக விவசாய நிலங்களை அபகரிப்பது, பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் நிறைவேற்றப்படாததை கண்டித்து தான் வெளிநடப்பு செய்யப்பட்டது என குறிப்பிட்டார். 


விடியா ஆட்சியில் 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை, குடிநீர் வரி என எல்லா வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தான் மக்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு. இந்த பட்ஜெட் தாக்கலின் போது 91 ஆயிரம் கோடி கடன் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த புதிய திட்டம் பற்றி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதற்கான நிதியும் ஒதுக்கப்ப்டவில்லை என கூறினார். ஆனால் ஜிஎஸ்டி வரி, கலால் வரி உயர்ந்துள்ளது, அதிக வருமானம் கிடைத்துள்ளது. மேலும் பத்திரப்பதிவு, பெட்ரோல் டீசல், சாலை வருவாய் உயர்ந்துள்ளது. இந்த சூழலில் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். ஆனால் பற்றாக்குறை உள்ளது என கூறுகின்றனர். 


மேலும் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இருந்த போது கொரோனா தொற்று பரவி வந்தது. வரி வருவாய் என்பது கிடையாது. செலவு அதிகரித்தது. இருப்பினும் மக்களுக்கு தேவையானவற்றை, மருத்துவ கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டது. அதையும் தற்போது இருக்கும் அரசு சூழலையும் ஒப்பிடக்கூடாது என்றார். 


மக்களை ஏமாற்றும் அரசாக திகழ்கிறது. நீட் தேர்வுக்கு இன்னும் தடை விதிக்கவில்லை.  நீட் தேர்வு தடை ரகசியம் சட்டப்போராட்டம் என காரணம் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதனை கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும். கடன் வாங்காலம் இந்த ஆட்சி நடக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆதி திராவிட மக்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். 


சட்டம் ஒழுங்கு பற்றிய கேள்விக்கு சட்டம் ஒழுங்கு என்பது கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் அடிமை என சீரழிந்துள்ளது.  முதலில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் இந்த தகுதி நிர்ணயம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படவில்லை. ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதில் எத்தனை பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக மக்களை ஏமாற்றும் பட்ஜெட் தான் இது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த பெட்ஜெட் மூலம் எந்த பயனும் இல்லை”  என கூறினார்.