அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது, திமுகவினர் வழக்குகளும் மீண்டும் திறக்கப்பட்டு, மேல் விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்தின் முன் நிற்கும் காலம் விரைவில் வரும் என்று விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


சராமாரி கேள்வி


”ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சட்டத் துறை அமைச்சரே, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு அமைச்சர். அவர், தன் மீதான வழக்குகளை அரசியல் கட்சி சார்பற்ற நேர்மையான வழக்கறிஞர்களை வைத்து விசாரணையை விரைவுபடுத்துவாரா?


எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, ஸ்டாலினால் குற்றம் சுமத்தப்பட்ட மந்திரி செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை, விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளது. கைதி எண் பெற்று சிறைத் துறை காவலில் உள்ள ஒருவரை துறையில்லா அமைச்சர் என்று பொம்மை முதலமைச்சர் அறிவித்தது ஏன்?


தற்போதைய அமைச்சர் ஒருவர், முதலமைச்சருடைய மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் தவிப்பதாக, பேசிய ஒலி நாடா ஒன்று சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்த நிலையில், அதைப் பற்றி இதுவரை பொம்மை முதலமைச்சர் எந்த ஒரு நடுநிலை விசாரணைக்கும் உத்தரவிடாமல் இருப்பது ஏன்?


எதிர் வரப்போகும் வழக்குகளில் இருந்து தப்பிக்க அங்கும் இங்குமாக அலைமோதும் ஒருவர், தனது குடும்பம் மற்றும் செந்தில்பாலாஜி மீதுள்ள குற்றங்களை மறைக்க, மாநில சுயாட்சி, திராவிட மாடல் மற்றும் ஆளுநருடன் மோதல் போன்ற உருட்டுகளை நடத்துவது, இவர் தன்னை உத்தமர் போல் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவா?


ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு மண்டியிட்டு மடல் எழுதுவது பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. இவருடைய சட்டத் துறை மந்திரி ரகுபதி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், எங்கள் முன்னாள் அமைச்சர்கள் பற்றி குறிப்பிட்டதையே மீண்டும் தன் கடிதத்தில் திரு. ஸ்டாலின் வாந்தி எடுத்தது ஏன்?


மெகா ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தனது குடும்பத்தையும், அரசையும் காப்பாற்றிக்கொள்ள, விதிவசத்தால் முதலமைச்சரான திரு. ஸ்டாலின், கடப்பாரையை விழுங்கி, சுக்கு கஷாயம் குடித்து ஏப்பம் விட்டுவிடலாம் என்று நினைக்கிறார். காற்றடித்த பலூனை எவ்வளவுதான் தண்ணீருக்குள் அழுத்தினாலும் அது மேலே வந்தே தீரும்.


எங்களுக்கு நீதியின்பால் நம்பிக்கை உள்ளது. எங்கள் முன்னாள் அமைச்சர்கள் மீது, திமுக அரசின் ஏவல் துறை மூலம் புனையப்பட்ட வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படவே இல்லை. அதற்குள் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ள விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


எச்சரிக்கை விடுத்த எடப்பாடி


முதலில், விடியா ஆட்சியின் தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை அரசியல் கட்சி சார்பற்ற நேர்மையான வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து, நேர்மையாக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளுங்கள். மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும் முன் நீங்களும், உங்கள் சகாக்களும் உத்தமர்களா? என்று சிந்திக்கவும்.


"உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்" என்பது போல், அம்மாவின் ஆட்சி மீண்டும் அமையும்போது, உங்கள் அனைவருடைய வழக்குகளும் மீண்டும் திறக்கப்பட்டு, மேல்விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்தின் முன் நிற்கும் காலம் விரைவில் வரும் என்று விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்” என இபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.