நாடு முழுவதும் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு சேர நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது. இந்த நீட் தேர்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் பெயரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 7.5% ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. இது தொடர்பான சட்டத்தையும் இயற்றியது. 


தமிழ்நாடு அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 7.5% சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்தச் சட்டத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். 


இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி வில்சன் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் ”2014 முதல் 2019-ம் வரை 3,4,அல்லது 5 மாணவர்களுக்கே  எம்பிபிஎஸ் சீட்டு கிடைத்தது. இதற்கு காரணம் நீட் தேர்வுதான். அரசு பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பு படிக்கும் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த வழக்கில் முக்கியமாக எதிர்ப்பு தெரிவித்தது மத்திய அரசுதான். அதிமுக ஆட்சியில் மருத்துவப் படிப்பில் மட்டும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அனைத்து தொழிற்படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இது தொடர்பாக தற்போது மாநில சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இது திமுக தலைமையிலான அரசு பதிவேற்ற பிறகு சமூகநீதிக்கு கிடைத்த மூன்றாவது வெற்றி இதுவாகும். இந்த இடஒதுக்கீட்டின்  கீழ் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கான செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும்” எனத் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண