ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசரச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் திடீரென சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளன. 


ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அவசரச் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.


இதை எதிர்த்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சார்பில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், இன்னும் அவசரச் சட்டம் அமலுக்கு வராததால், வழக்குத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை என்ற தமிழக அரசு தெரிவித்தது. இந்த வாதத்தை ஏற்று, வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.


இதையடுத்து அவசரச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு புதிதாக வழக்குத் தொடர ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


பின்னணி என்ன?

 

மும்பையைத் தலைமையிடமாக கொண்ட அனைத்திந்திய விளையாட்டு கட்டமைப்பு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’’ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் வழங்கக்கூடாது என்று நிபந்தனை உள்ளது.

 

ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடுதான் விளையாட்டுகள் வழங்கப்படுகின்றன. அதற்கு அடிமை ஆவதை தடுப்பதற்கான சோதனைகள் உள்ளன.

 

இந்த நிலையில் தமிழக அரசு ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறமையான விளையாட்டுகளை சூதாட்டம் என கூறி  தடை செய்ததை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டே ரத்து செய்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசரச் சட்டத்தை கொண்டு வரப்பட உள்ளது. 



 

போக்கர் மற்றும் ரம்மி ஆகியவை திறமைக்கான விளையாட்டுகள், இதில் திறமையான வீரர்கள் வெற்றி பெறுவார்கள் . இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாகக் கருதுகிறோம். அதை பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் எல்லைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

 

மற்ற மாநிலங்களின் சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற  தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்டுள்ள ஆன்லைன் தடை சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்’’.

 

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு  பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்ரவரத்தி அமர்வில், விசாரணைக்கு வந்த போது,  மனுதாரர்  தரப்பு வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.  கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை இன்று (நவம்பர் 16ம் தேதிக்கு) ஒத்தி வைத்தனர்.

 

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசரச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளன. இன்னும் அவசரச் சட்டம் அமலுக்கு வராததால், வழக்குத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை என்ற தமிழக அரசு தெரிவித்த நிலையில், அந்த வாதத்தை ஏற்று, வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து அவசரச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு புதிதாக வழக்குத் தொடர ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.