Natrampalayam: 2 நாட்கள் இருளில் மூழ்கிய 38 கிராமங்கள்; கிருஷ்ணகிரி நாட்றாம்பாளையம் பஞ்சாயத்தில் நடந்தது என்ன.?
கிருஷ்ணகிரி நாட்றம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 38 கிராமங்கள் கடந்த 2 நட்களாக இருளில் மூழ்கியிருந்தன. அதற்கு காரணம் என்ன.? பார்க்கலாம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நிலத்தடி மின்சார கேபிள் பழுதுபார்க்கும் பணியின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நாட்றாம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில் 2 நாட்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்தனர்.
இருளில் மூழ்கிய 38 கிராமங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவில் உள்ள நாட்றாம்பாளையம் ஊராட்சியில் 38 கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நிலத்தடி மின்சார கேபிள் பழுதுபார்க்கும் பணியின் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதன்பின், பழுது பார்க்கும் பணிகள் நிறைவடைந்து, ஞாயிற்றுக் கிழமையான நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் தான் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், நாட்றாம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள 38 கிராமங்கள் 2 நாட்களாக இருளில் மூழ்கின.
நாட்றாம்பாளையம் மட்டுமல்லாமல், தொட்டமஞ்சு பஞ்சாயத்தில் உள்ள ஒரு பகுதி கிராமங்களும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கோரிக்கை
நாட்றாம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு, பென்னாகரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. அங்கிருந்து வரும் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், பென்னாகரத்திற்கு பதிலாக, அஞ்செட்டியிலிருந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, இப்பிரச்னை குறித்து மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளருடன் விவாதித்ததாகவும், இப்பிரச்னை தீர்த்து வைக்கப்படும் என்று கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
மின்வார வாரியம் கூறுவது என்ன.?
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் முதல் ஒகேனக்கல் வரை, நிலத்தடி மின் கேபிள்களில் ஏற்பட்ட சேதம் போன்ற பிரச்னைகள் குறித்து புகார்கள் பெறப்பட்டு, அவை சரி செய்யப்பட்டதாக மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்காக மின் கம்பியின் ஒரு பகுதி மேல்நிலை மின் பாதையாக மாற்றப்பட்டதால் காலதாமதம் ஆனதாகவும், அதனால் தான் மின்சாரத்தை மீண்டும் வழங்க ஞாயிற்றுக் கிழமை இரவு ஆனதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதோடு, அஞ்செட்டியில் இருந்து நாட்றாம்பாளையம் வரை மின்சாரம் வழங்குவதற்கான திட்டத்தை மாநில அரசுக்கு அவர்கள் வழங்கியுள்ளதாகவும், பிரச்னைகள் படிப்படியாக தீர்க்கப்படும் என்றும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.





















