தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 12 மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சென்னை, நீலாங்கரையில் விஜய் சந்தித்து வருகிறார். விஜய்யின் இந்த மாணவர்கள் சந்திப்பு அவரின் அரசியலுக்கு வருவதற்கான ஒரு மறைமுக அறிவிப்பு என்று பலரும் கூறி வருகின்றனர்.


இந்த நிலையில், அரசியலுக்கு வந்த நடிகர்கள் பட்டியலை கீழே காணலாம்.


எம்.ஜி.ஆர்.:


இன்று வெள்ளித்திரையில் நம்பர் 1 நாயகனாக உலா வரும் பலரும் அரசியலில் குதித்து முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்க ஆசைப்பட முழு முதற் காரணம் எம்.ஜி.ஆர். மட்டுமே. கருப்பு வெள்ளை காலத்திலே தமிழ்நாட்டின் திரையரங்கில் ஆக்‌ஷன் திருவிழாவை நடத்தி காட்டி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலம் முதலே தி.மு.க.வில் தீவிரமாக இருந்து எம்.எல்.ஏ.வாக இருந்தவர், கருணாநிதியுடனான மோதலுக்கு பிறகு அ.தி.மு.க.வை தொடங்கினார். அ.தி.மு.க.வை தொடங்கி சட்டமன்ற தேர்தல்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி 3 முறை முதலமைச்சராக இருந்து அசத்தினார்.


சிவாஜி:


தமிழ் திரையுலகின் ஜாம்பவானும் எம்.ஜி.ஆருக்கு இணையாக இருந்த ஒரே நடிகரும் சிவாஜிகணேசன். ஆரம்பகாலம் முதலே காங்கிரஸ் மேல் ஈடுபாடு கொண்ட சிவாஜி, திராவிட இயக்கத் தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்தவர். நீண்ட காலம் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தவர் 1988ம் ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி தமிழக மக்கள் முன்னேற்ற கூட்டணியை தொடங்கினார். 1989 தேர்தலில் அ.தி.மு.க. ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்தார். திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய சிவாஜி, அரசியலை கைவிட்டு மீண்டும் நடிப்புக்கே திரும்பினார்.


பாக்யராஜ்:


எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய தாக்கம் ஒவ்வொரு கால ஹீரோக்கள் வளர்ச்சியின்போதும் சினிமாவில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அந்த வரிசையில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தவர் பாக்யராஜ். நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என்று பன்முக வித்தகனாக திரையில் கோலோச்சிய பாக்கியராஜ் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். 1989ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை பாக்யராஜ் தொடங்கினார். ஆனால், தொடக்கத்திலே தோல்வியுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பாக்யராஜ் பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார். பின்னர், 2006ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். தற்போது எந்த கட்சியிலும் அவர் இல்லை.


டி.ராஜேந்திரன்:


தமிழ் திரையுலகின் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று அனைத்து துறைகளிலும் வெற்றி கண்டவர் டி.ராஜேந்திரன். அடுக்குமொழி வசனத்தால் மக்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர், அரசியல் களத்தில் புகுந்தார். தி.மு.க.வில் கொள்கை பரப்புச் செயலாளராக பணியாற்றியவர், 1996ம் ஆண்டு பூங்காநகர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். 2004ம் ஆண்டு லட்சிய தி.மு.க. என்ற கட்சியை தொடங்கினார்.


கார்த்திக்:


தமிழ் திரையுலகின் 1980-90 காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக உலா வந்தவர் நடிகர் கார்த்திக். மிகவும் மாஸ் ஹீரோவாக உலா வந்த காலம் முதல் அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் இருந்து கொண்டே இருந்தது. இதையடுத்து, 2006ம் ஆண்டு அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் 2009ம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார். பின்னர், அந்த கட்சியை களைத்துவிட்டு 2018ம் ஆண்டு மனித உரிமைகள் காக்கும் கட்சியை தொடங்கினார். திரையில் மிகப்பெரிய நாயகனாக உலா வந்தாலும் அரசியல் கட்சியில் அவரால் சோபிக்க முடியவில்லை என்பதே உண்மை.


விஜயகாந்த்:


தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஓரளவு வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் விஜயகாந்த் மட்டுமே. ரஜினி, கமல் கோலோச்சியபோது அவர்களுக்கு போட்டியாக அவர்கள் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகர் விஜயகாந்த். மிகவும் துணிச்சலனாவர் என்ற பெயர் பெற்ற விஜயகாந்த் ரசிகர்கள் 1993ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார். விஜயகாந்த் கட்சியை தொடங்கியபோது தி.மு.க., அ.தி.மு.க.வினரே ஆச்சரியப்பட்டனர். 2006ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றாலும், 2011ம் ஆண்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார். அதற்கு அடுத்த 2016 தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.


சரத்குமார்:


தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக உலாவந்த சரத்குமார் 1996ம் ஆண்டு தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.  1998ம் ஆண்டு திருநெல்வேலி எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர், தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்தார். 2006ல் அ.தி.மு.க.வில் இருந்து சரத்குமார் நீங்கினார். 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். தனிக்கட்சி தொடங்கினாலும் அவரால் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை.


கமல்ஹாசன்:


கடந்த அ.தி.மு.க. ஆட்சியுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த கமல்ஹாசன் 2018ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி மதுரையில் மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை தொடங்கி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர், கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


முன்னணி நடிகராக உலா வந்த நடிகர் ராமராஜன் தனிக்கட்சி தொடங்காவிட்டாலும் அ.தி.மு.க.வில் பிரபலமாக விளங்கினார். இவர்கள் தவிர நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குகிறேன் என்று அறிவித்துவிட்டு, கட்சி தொடங்காமலே தனது அறிவிப்பை வாபஸ் பெற்றார். இவர்கள் தவிர நடிகர் விஷாலும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்து பின்னர் போட்டியிட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.