இந்திய ராணுவத்தில் உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருதைப் பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், தன் விருதுக்குப் பின்னால் இருந்த கடுமையாக கள நிலவரம் பற்றி பேசியுள்ளார். 

Continues below advertisement

ஒரு நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நான் 2017ம் ஆண்டு ராணுவத்துக்கு தேர்வானேன். அதற்காக பயிற்சிக்கு சென்றிருந்தோம். ராணுவத்தில் உள்ள பீரங்கி படை ஒன்றில் பணியாற்றினேன். அது ஒரு தற்காலிக பணிதான் என்றாலும் நான் எட்டு ஆண்டுகளாக பணியாற்றினேன். பஞ்சாப், லடாக், சியாச்சின் பனிப்பாறை ஆகிய இடங்களில் வேலை பார்த்துள்ளேன். இதில் சியாச்சின் பனிப்பாறை பகுதியில் மைனஸ் 50 டிகிரி அளவில் குளிர் இருக்கும். எனக்கு சீனாவுடன் போர் நடக்க வேண்டுமென்றால் ஆசை இருந்தது. 2024ல் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் எனப்படும் பயங்கரவாத தடுப்பு படைக்கு சென்றேன். பயிற்சி எல்லாம் முடித்து ஆபரேஷன் குழுவில் இணைந்தேன். ஒருநாள் சோபியான் பகுதியில் பெரிய தீவிரவாதி ஒருவன் இருந்தான். ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த அவன், 9 ஆண்டுகளாக யார் கண்ணிலும் சிக்காமல் இருந்தான். இளைஞர்களை மூளைச்சலவை செய்து தவறான செயல்களில் ஈடுபட வைப்பது தான் வேலையாக செய்து வந்தான். ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் அவனை பிடிக்க கஷ்டப்பட்டது. 

Continues below advertisement

நான் டீமில் இணைந்த நிலையில் ஒருமுறை அவன் எங்களிடம் இருந்து தப்பித்திருந்தான். 2024 டிசம்பரில் அதிகாலையில் அந்த கூட்டத்தைப் பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தகவல் வந்த ஒரு வீட்டை சுற்றி வளைத்தோம். நான் தான் அந்த கூட்டத்தின் தலைவனை கொன்றேன். அடுத்த சில மணி நேரம் வரை அந்த தாக்குதல் தொடர்ந்தது. அதில் மரத்திற்கு பின்னால் இருந்து சிறிது நான் விலக ஒரு துப்பாக்கிக் குண்டு என்னை தாக்கியது. தாடையிலும், கையிலும் அடிப்பட்டிருந்தது. அப்போது தான் இன்னும் ஒருவர் அந்த கூட்டத்தில் உயிரோடு இருக்கிறான் என்பது தெரிந்தது. 5 பேரையும் கொன்ற பிறகு தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். 

Also Read: Chief Minister Pharmacy: 90% நஷ்டம்.. மூடும் நிலையில் முதல்வர் மருந்தகங்கள்.. விஜய் நடவடிக்கை எடுப்பாரா?

ராணுவ ஹெலிகாப்டரில் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மருத்துவமனையில் சேர்த்தார்கள். கிட்டதட்ட 4 மாதங்களாக சாப்பிட முடியாமல் அவதிப்பட்டேன். குடலுக்கு நேராக ட்யூப் போட்டு சாப்பாடு செல்ல வழிவகை செய்தார்கள். ரொம்ப மனவேதனையாக இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் என் நிலைமையைப் பார்த்து வருத்தப்பட்டார்கள். அதன்பிறகு 2026ம் ஆண்டு இந்தியாவின் உயரிய அமைதிக்கான வீரதீர விருதான கீர்த்தி சக்ராவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராஷ்ட்ரியபதி பவனுக்கே அழைத்து கொடுத்தார்கள். இந்த விருது ராணுவத்தில் இருப்பவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காது. எனக்கு இது கிடைத்ததில் பெருமை தான்.

எனக்கு அடிபட்ட உடனே என் சக வீரர்களிடம் வீட்டிற்கு தகவல் சொல்ல வேண்டாம் என சொன்னேன். என் மனைவி அப்போது 3 மாத கர்ப்பமாக இருந்தார். ஒருநாள் என்னிடம் இருந்து போன் வராத நிலையில் மறுநாள் தான் விஷயம் சொல்லப்பட்டது. என் மனைவியின் மனநிலை அவருக்கு தான் தெரியும். குழந்தையும் நல்லபடியாக பிறந்தது. மீண்டும் ராணுவ பணிக்கு செல்வதைப் பற்றி கேட்பார்கள். எனக்கு உயிரை விட நாடு தான் முக்கியம். 18,19 வயதில் ராணுவத்திற்குள் செல்பவர்கள் மனநிலையே கண்டிப்பாக மாறிவிடும்” என மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.