கிளாம்பாக்கம் ரயில் நிலையம்: மே 15-க்குப் பிறகு திறப்பு! தென்மாவட்டப் பயணிகளுக்கு தீர்வு!
Kilambakkam Railway Station Update : "கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மே மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது"

Kilambakkam New Railway Station: தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் குவிந்து இருக்கிறது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சென்னையை சுற்றி பல இருப்பதால், வேலை வாய்ப்புகளைத் தேடி சென்னைக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சென்னையில் இட நெருக்கடி காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த 15 ஆண்டுகளுக்காக அதிகரித்து வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சென்னையின் பிரதான பேருந்து நிலையமாக இருந்த, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் 400 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விடுமுறை நாட்களிலும் அதிக அளவு பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் Kilambakkam Railway Stations
பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரயில் நிலையம் இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறையிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.
தென்னக ரயில்வே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்றால், நிதி ஒதுக்கப்பட்டு ரயில் நிலையம் உருவாக காலதாமதமாகும் என்பதால், சி.எம்.டி.ஏ பங்களிப்போடு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு நேரெதிரில் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
எங்கே அமைகிறது கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ? Kilambakkam Railway Station Location
வண்டலூர்- ஊரப்பாக்கம் (கூடுவாஞ்சேரி) புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், 3 நடைமுறைகள் அமைக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் கவுண்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அதேபோன்று பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய ரயில் நிலையம் என்பதால், பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு விழா எப்போது? Kilambakkam Railway Station Open Date
கிளாம்பக்கம் ரயில் நிலையம் மே மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு, ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் மிகப்பெரிய, போக்குவரத்து புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















