Khushbu Sundar - BJP : நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தமிழ் ரசிகர்கள் முதல்முறையாக நடிகைக்குக் கோயில் கட்டியதும் குஷ்புவுக்குத்தான். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பும் வந்த பிறகும் குஷ்புவின் பேச்சும் செயல்களும் சர்ச்சையாவது தொடர் கதையாகவே இருக்கிறது.
1988-ல் தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழில் அறிமுகமான குஷ்பு, வருஷம் 16 படத்தின்மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார். 1990-களில் தமிழின் முன்னணி நடிகையாகக் கோலோச்சினார்.
இந்து மத அவமதிப்பு சர்ச்சை
2007-ல் திரைப்பட பூஜையின்போது விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலை அருகே இருந்த இருக்கையில் குஷ்பு அமர்ந்திருந்தார். அப்போது அவர் காலணி அணிந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. இதன் மூலம் இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும், இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்திலும் நடிகை குஷ்பு நடந்து கொண்டதாக விமர்சனம் எழுந்தது. வழக்கும் தொடரப்பட்டது.
கற்பும் தமிழகப் பெண்களும்
இதற்கிடையே குஷ்பு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன்பு தமிழகப் பெண்கள் உடல் உறவு கொள்வது குறித்து எந்த குற்ற உணர்வும் கொள்ளத் தேவையில்லை என்ற வகையில் குஷ்பு பேசியது கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது. கற்பு குறித்துத் தவறாகப் பேசிவிட்டார் குஷ்பு என்று சர்ச்சைகள் எழுந்தன.
2010-ல் திமுகவில் இணைந்தார் குஷ்பு. 2013-ம் ஆண்டு திமுகவின் அடுத்த தலைவர் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “திமுக தலைவர் பதவிக்குத் பொருத்தமானவரை பொதுக்குழுதான் முடிவு செய்யும். அடுத்த தலைவர் ‘தளபதி’யாக இருக்க அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்” என்று கூறியது கட்சிக்குள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திருச்சியில் குஷ்பு மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
பிறகு திமுகவில் இருந்து விலகிய குஷ்பு, சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு
காங்கிரஸில் சேர்ந்தபிறகு, அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தும் தீவிரவாத அமைப்பு என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சாடியிருந்தார் குஷ்பு. இதுவும் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அதேபோல ருத்ராட்ச மாலையில் தாலி போன்ற பொருளைக் கோர்த்து அணிந்தது, கடவுள் படம் அச்சிட்ட சேலை அணிந்தது என சர்ச்சைகள் அவரைச் சுற்றி வட்டமிட்டன.
2016ஆம் ஆண்டு திருநங்கைகள் குறித்து பேட்டியளித்த குஷ்பு, திருநங்கைகள் உயர் பதவிகளுக்கு செல்ல அவசரப்படுகிறார்கள் என்றும் மேலும் சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இது திருநங்கைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, போராட்டத்துக்கு வித்திட்டது. இதற்கிடையில் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலரையும் சரமாரியாக விமர்சித்து வந்தார் குஷ்பு.
2020-ல் பாஜகவில் இணைந்தபிறகு ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்தார் குஷ்பு. இதற்கிடையே திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய, நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டு, அவருக்கு நாரி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
சேரி மொழி சர்ச்சை
மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது" என்று சொன்னதாக கூறப்படுகிறது. சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பு அவமதித்து உள்ளார் என பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் குஷ்புவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
பிச்சை சர்ச்சை
இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 கொடுக்கப்படுவது குறித்து, பிச்சை கொடுத்தால் பெண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று குஷ்பு பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து திமுக சார்பில் பல்வேறு மகளிர் அமைப்புகள் போராட்டங்களைக் கையில் எடுத்து வருகின்றன.