Khelo India Games: இன்றுடன் முடிவடைய உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்:

நாட்டில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் விதமாக தான், மாநிலங்களுக்கு இடையேயான இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. முதல்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த போட்டியை, கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி நேரில் சென்னை வந்து தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டிற்கு மேலும் 6 தங்க பதக்கம்?

இதில், கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள், பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டன. தமிழ்நாடு சார்பிலும் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் வீரர் மற்றும் வீராங்கனைகள் களமிறங்கினர். இதுவரை 35 தங்கம், 20 வெள்ளி மற்றும் 36 வெண்கலப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. அதிலும், நேற்று 6 தங்கப் பதக்கங்களை தமிழக வீரர், வீராங்கனைகள் தனதாக்கியுள்ளனர். அதன்படி,

  • பெண்களுக்கான 200 மீட்டர் மெட்லே பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஸ்ரீநிதி நடேசன் 2 நிமிடம் 26.78 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்றார்
  • ஆண்களுக்கான 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் நீச்சல் பிரிவில் சென்னையைச் சேர்ந்த நித்திக் நாதெல்லா 2 நிமிடம் 04.50 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்

  • டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் இறுதிசுற்றில் தமிழகத்தின் பிரனவ்- மகாலிங்கம் ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட்டில் மராட்டியத்தின் இணையை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது.
  • பெண்கள் இரட்டையர் பிரிவிலும் தமிழகத்தைச் சேர்ந்த ரேவதி- லட்சுமி பிரபா கூட்டணி தங்கத்தை தட்டி தூக்கியது
  • பளுதூக்குதலில் பெண்களுக்கான 81 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் ஆர்.பி. கீர்த்தனா ஸ்னாட்ச் முறையில் 85 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 103 கிலோ என மொத்தம் 188 கிலோ தூக்கி புதிய தேசிய சாதனையுடன் முதலிடத்தை பிடித்தார்.
  • பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் வினயக்ராம்- ஸ்வஸ்திக் ஜோடி,  டெல்லி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது

பதக்கப்பட்டியல்:

ரேங்க் மாநிலங்கள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 மகாராஷ்டிரா 53 46 51 150
2 ஹரியானா 35 22 46 103
3 தமிழ்நாடு 35 20 36 91
4 டெல்லி 13 18 24 55
5 ராஜஸ்தான் 13 16 16 45

 

இன்றுடன் முடிவடைகிறது..!

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் கேலே இந்தியா விளையாட்டு போட்டிகள், இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று கால்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஆகியோர் பங்கேற்கின்றனர். அவர்கள், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளனர்.