Pongal Wishes : இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம்தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள்தான்.


ஆண்டுதோறும் வரும் தை மாதம் 1-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல். அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 






இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் வலைத்தளப் பதிவில், ”அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். மண்ணைப் பொன்னாக்க அயராது உழைப்பவர்களின் வாழ்வில் எல்லா வளமும் நிறைந்திருக்கட்டும். கோடானகோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் இந்த அறுவடை திருநாளை கொண்டாடி மகிழ்கிறோம்” என தெரிவித்துள்ளார்.