கரூரில் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் சீல் வைத்து வருகின்றனர்.


 




கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் சுமார் 520 ஏக்கருக்கு மேலாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோவில் (இனாம்) இடங்களில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், திருத்தொண்டர் திருசபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவில் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என  கடந்த 2019 ல் உத்தரவிட்டது.


 


 




பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்க முடியவில்லை. இதையடுத்து திருத்தொண்டர் திரு சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம்  கரூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவு உத்தர விட்டது. அதில் கோவில் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலைத்துறை வசம் ஒப்படைத்து அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டது.


 


 




இதனைத் தொடர்ந்து அதிரடியாக களம் இறங்கிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுப்படி வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்களை காவல்துறை உதவியோடு மீட்கும் பணியில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் பல்வேறு போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கு இடையே 15 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தும், கோவில் நிலங்களில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் யாரும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். முதல் கட்டமாக கோவில் பெயரில் பட்டா உள்ள இடங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, 34 இடங்களை சீல் வைத்து காலி செய்ய கணக்கீடு செய்துள்ள அதிகாரிகள் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து கோவில் நிலங்களை மீட்டு வருகின்றனர்.


 




இன்று, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் சீல் வைத்து வருகின்றனர். கடந்த மாதம் சீல் வைக்கும் பணி நடந்தபோது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. கோவிலுக்கு சொந்தமான இடங்களை டிஜிட்டல் சர்வே செய்யும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


 




 


இந்நிலையில் இன்று அப்பகுதிக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வர்த்தக கடைகளுக்கு சீல் வைக்க அதிகாரிகளின் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வங்கி, ஏடிஎம், கோவில்கள் உட்பட 18 இடங்கள் சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.