மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், எரிவாயுவை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு வணிகர் சங்கம் ஆதரவளிக்கும் என்றும் கரூரில் விக்கிரம ராஜா பேட்டியளித்தார்.


 




கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்ட அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திண்டுக்கல் மண்டல கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 


 


 


 




நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, “ஈரோடு மாவட்டத்தில் மே ஐந்தாம் தேதி வணிகர் உரிமை முழக்க மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் திண்டுக்கல், தேனி, கரூர், பழனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள். அந்த மாநாட்டில், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை லைசன்ஸ் பெரும் முறையை மத்திய அரசு ஓராண்டுக்கு ஒரு முறை என மாற்றி உள்ளது. இந்த நடவடிக்கை அதிகாரிகள் ஆண்டுக்கு ஒரு முறை லஞ்சம் வாங்குவதற்காகவே அதிகாரிகள் செய்யும் சூழ்ச்சியாக நாங்கள் பார்க்கிறோம். எனவே, மத்திய அரசு அந்த உத்தரவை திரும்ப பெற்று 5 ஆண்டுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டும், அப்படி  இல்லாத சூழ்நிலையை ஏற்பட்டால், தற்போது தொலை தொடர்பு துறையில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது. அதே நிலைதான் வணிகர்களின் நிலையிலும் தொடரும். வணிகவரித்துறை அதிகாரிகள் வாகனங்களை சோதனை என்ற பெயரில் சோதனை செய்யும் முறை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.


 


 




இந்த சூழ்நிலையை பார்க்கும் போது வணிகத்தை விட்டு வெளியேறி விடலாமா? என வணிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, நடைபெறும் மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள இருக்கிறது. அந்த தீர்மானங்களை மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமரிடம் நேரில் சந்தித்து வழங்க உள்ளோம். அப்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தயாராக உள்ளது” என்றார். இதனை மாநில அரசிடம் தெரிவித்து வலியுறுத்துவீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, விலைவாசி குறைவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல், டீசல், எரிவாயுவை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்று கூறினார்.