கரூர் பேருந்து நிலைய சிக்னலில் கார் பேட்டரி பழுது காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. புகை வருவதை கண்டு அதிர்ஷ்டவசமாக காரில் இருந்து தனது செல்லப்பிராணியான நாயுடன் அதன் உரிமையாளர் வெளியேறினார். பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கரூர் அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிந்து வருகிறார். மேலும், அகில இந்திய எரிபந்து கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.




சொந்த ஊரான கரூருக்கு தனது செல்லப்பிராணியான நாயுடன் காரில் புறப்பட்ட மணி, கரூர் நகரப் பகுதியான பேருந்து நிலைய சிக்னலில் இரவு சுமார் 7.15 மணியளவில் வந்து கொண்டிருந்தார். அப்போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியே வருவதை கண்ட அவர், உடனடியாக தனது செல்லப்பிராணியுடன் வெளியேறினார்.



 


புகை வெளியேறிய சில நிமிடங்களில் காரின் முன் பகுதியில் தீ பற்றி மளமளவென எரிந்தது. பேருந்து நிலைய சிக்னல் அருகில் காரில் தீ பற்றி எரிந்ததைக் கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.




தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து சுமார் 15 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன் பகுதியில் பற்றி எரிந்த தீ விபத்து காரணமாக எஞ்சின் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. பரபரப்பான இரவு நேரத்தில் கரூர் மாநகரில் காரில் பற்றி எரிந்த தீ விபத்தை பொதுமக்கள் கூடி நின்று பார்த்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




கரூரில் பிரபல தனியார் நகைக்கடையின் ஜி.எஸ்.டி அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை.


கரூர் ஜவஹர் பஜாரில் தனியார் (கணேஷ்) ஜூவல்லரி செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு காலை 11 மணியளவில் வந்த ஜி.எஸ்.டி துறை அதிகாரிகள் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.




ஈரோடு மற்றும் கரூர் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து வந்த குழு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் பல்வேறு நகை கடைகள் செயல்பட்டு வருகிறது.




மற்ற கடைகளை காட்டிலும் அதிகளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த கடையில் நாளொன்றுக்கு லட்ச கணக்கில் விற்பனை நடைபெற்று வருவதால், முறையாக ஜி.எஸ்.டி வரி போடப்படுகிறதா, ஜி.எஸ்.டி வரி கட்டப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், கரூர் மாவட்டத்தில் பிரபல நகைக்கடையில் திடீர் சோதனையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.