Karur Tragedy: கரூர் துயரம்; சென்னை நீதிமன்றம் விசாரித்தது ஏன்? SIT விசாரணை, கிரிமினல் வழக்கானது எப்படி? கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்!
Supreme Court on Karur Stampede: சம்பவ இடத்தில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை. காவல்துறை அறிவுறுத்தலின்படி, அவர்களின் பாதுகாப்புடனேயே அவர் அங்கிருந்து வெளியேறினார்- தவெக

கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரச்சார நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை, மதுரை உயர் நீதிமன்றத்துக்கு பதிலாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன்? பிரச்சார நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவுக்கான உத்தரவு அமைக்கப்பட்டது எப்படி? கிரிமினல் வழக்காகக் கருதப்பட்டது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தவெக மேல் முறையீடு
கரூர் துயரச் சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசு அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தவெக மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை தற்போது உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், நீதிபதிகள் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சரியா தவெக மற்றும் மகனை இழந்த தந்தை ஆகிய இரு தரப்பும் தொடர்ந்த வழக்கை விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் தவெக தரப்பு, ’’எதிர் மனுதாரராக விஜய் உள்ளாத நிலையில், அவரை, அவரின் தலைமைப் பண்பை உயர் நீதிமன்ற நீதிபதி விமர்சித்தது ஏன்?’’ என்று வாதிட்டது. அதேபோல ’’தமிழக காவல்துறை அதிகாரிகளை மட்டுமே கொண்டு அமைக்கப்பட சிறப்பு விசாரணைக் குழு மூலம் உண்மை வெளியே வராது.
விஜய் தப்பி ஓடவில்லை
சம்பவ இடத்தில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை. காவல்துறை அறிவுறுத்தலின்படி, அவர்களின் பாதுகாப்புடனேயே அவர் அங்கிருந்து வெளியேறினார்’’ என்றும் தவெக தனது வாதங்களை முன்வைத்துள்ளது. தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் வாதிட்டு வருகிறார். தமிழக அரசு தரப்பி மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டு வருகிறார்.
சரமாரியாகக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள், கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரச்சார நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை, மதுரை உயர் நீதிமன்றத்துக்கு பதிலாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன்?
பிரச்சார நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவுக்கான உத்தரவு அமைக்கப்பட்டது எப்படி? கிரிமினல் வழக்காகக் கருதப்பட்டது ஏன்? மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே, சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வேறு வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது ஏன்? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை, தற்போது பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.






















